பாரத சமுதாயம்

பாரத சமுதாயம்

bookmark


ராகம் - பியாக்
தாளம் - திஸ்ர ஏகதாளம்

பல்லவி

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத)

அனுபல்லவி

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
   முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
   உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)

சரணங்கள்

மனித ருணவை மனிதர் பறிக்கும்
   வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
   வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
   வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த
   வாழ்க்கை இனியுண்டோ ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
   எண்ணரும் பெருநாடு,
   கனியும் கிழங்கும் தானி யங்களும்
   கணக்கின்றித் தரு நாடு - இது
   கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
   கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத)    1

இனியொரு விதிசெய் வோம் - அதை
   எந்த நாளும் காப்போம்,
தனியொரு வனுக் குணவிலை யெனில்
   ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத)    2

"எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்"
   என்றுரைத்தான் கண்ண பெருமான்,
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
   இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
   இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
   இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத)    3

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
   எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
   எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத)    4