ஜாதீய கீதம்

ஜாதீய கீதம்

bookmark


(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய "வந்தே மாதரம்" கீதத்தின் மொழிபெயர்ப்பு)

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)    1

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!    (வந்தே)    2

*முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை!    (வந்தே)    3

நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)    4

தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே)    5

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவி நீ! (வந்தே)    6

போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித் தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே)    7

(* மூலப் பாடலில் ஏழு கோடி என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அது வங்காளத்தை மட்டுமே குறித்தது.)