பேட்டை துள்ளல்:
பேட்டை துள்ளல் ஒரு சடங்காகும். சுவாமி ஐயப்பன், மஹிஷி என்னும் துர்தேவதையை கொன்று வெற்றிகொண்டதன் நினைவாக பேட்டைதுள்ளல் ஆட்டம் ஆடப்படுகின்றது. ஆண்டுதோறுமுள்ள சபரிமலை புனிதப் பயணக்காலம் ஆரம்பித்ததன் அறிகுறியாகவும் இது நடத்தப்படுகிறது.
வழக்கமாக முதலில் அம்பலப்புழை குழுவினர் முதலில் பேட்டை துள்ளல் நடத்துகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் இக்குழுவில் இருப்பர். மத்தியான நேரம் பேட்டை சந்திப்பில் உள்ள ’கொச்சம்பலம்’ (சிறிய கோயில்) பகுதியில் நின்று வானத்தில் வட்டமிடும் பருந்தை தரிசித்தபின் பேட்டை துள்ளல் என்னும் ஆட்டமும் பாட்டும் ஆரம்பமாகும். சுவாமி ஐயப்பனின் நெருங்கிய நண்பராக இருந்த வாவர் சுவாமிகளுக்குரிய மரியாதையாகவும் பேட்டை துள்ளலைக் கருதுவர். குழுவினர் நயினார் பள்ளி வழியாக சாலையைக் கடந்து மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப்பாடிச் செல்வர். இவ்வாறு ஆடிச் செல்கின்ற அம்பலப்புழை குழுவினரை, எருமேலி மஹல்லு ஜமாஅத் கமிட்டித் தலைவர்கள் முறைப்படி வரவேற்று அவர்களுடன் செல்வர். அவர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலை (வலியம்பலம்- பெரிய கோயில்) சென்றடைந்ததும் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் அம்பலப்புழை குழுவினரையும் ஜமாஅத் தலைவர்களையும் வரவேற்பர்.
மதியத்திற்குப் பின் பகல் வெளிச்சத்தில் ஆகாயத்தில் நட்சத்திரத்தை தரிசித்தபின், ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் ஆரம்பமாகும். துள்ளலுக்குப் பின் இரண்டு குழுவினரும் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் இரவுநேரம் தங்கிவிட்டு, அடுத்தநாள் பம்பைக்குப் புறப்படுவர். அங்கு அவர்களுக்கு விருந்துச் சாப்பாடு (பம்பா சத்யை) வழங்கப்படும். தொடர்ந்து அவர்கள் மகரவிளக்கு விழா காண சன்னிதானத்தைச் சென்றடைவர்.
