பரம்பரை வழி:
சபரிமலையைச் சென்றடைய பல வழிகள் உள்ளன. அவற்றுள் எருமேலி வழி, வண்டிப்பெரியார் வழி, சாலக்கயம் வழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.. எருமேலி வழியாகச் செல்லும் பாதை பரம்பரை வழியாகக் கருதப்படுகின்றது. ஐயப்பன் மஹிஷையைக் கொல்வதற்கு இப்பாதை வழியாகத்தான் சென்றார் எனக் கூறப்படுகிறது. சபரிமலைக்குச் செல்லும் மிகக் கடினமானபாதையும் இதுதான். இந்தப் பாதை வழியாகச் செல்கின்றவர்கள், சுமார் 61 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பாதைகளில் நடந்தும் மலை ஏறியும் பயணம் செய்யவேண்டும். இவ்வழியாகச் செல்கின்றவர்கள் ஆங்காங்கே சில குறிப்பிட்ட பகுதிகளில் தங்கிச் செல்வர். இப்பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், எருமேலியிலுள்ள ஸ்ரீதர்ம சாஸ்தாவையும் வாவர் சுவாமியையும் வணங்கிவிட்டுப் பயணத்தை ஆரம்பிப்பர்.
எருமேலியிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ’பேரூர் தோடு’. ஐயப்பன் தன் பயணத்தின்போது இங்குதான் ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. சபரிமலை ஏறுவது இங்கிருந்துதான் என்பதாலும் இவ்விடம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த இடத்தை அடைந்ததும் பக்தர்கள் ஐயப்பனிடம் அடைக்கலம் கேட்டு சரணமந்திரங்கள் எழுப்புவதையும் கேட்கலாம். பேரூர் தோட்டிற்குப் பின்னால் அமைந்த காட்டுப்பகுதி ‘பூங்காவனம்’ என்று அறியப்படுகின்றது.
எருமேலிப் பாதையின் அடுத்த முக்கிய இடம் ‘காளகெட்டி’ (காளையைக் கட்டிய இடம்). இது பேரூர் தோட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஐயப்பன் மஹிஷியைக் கொல்லும் காட்சியை நேரடியாகக் காண சிவபெருமான் வந்தார் என்றும், அந்நேரம் அவர் தன்னுடைய வாகனமாகிய காளையை இங்குத்தான் கட்டியிட்டார் என்றும் நம்பப்படுகின்றது. இங்கு அமைந்துள்ள கோயிலில் தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபடுவர்.
காள்கெட்டியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ‘அழுதை’ என்னும் ஆறு ஓடுகிறது. இது பம்பையின் ஒரு கிளை நதி. பக்தர்கள் அழுதை ஆற்றிலிருந்து சிறு கற்களைப் பொறுக்கி பாதுகாத்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர் அவர்கள் செங்குத்தான அழுதைக் குன்றில் ஏறுகின்றனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரம் கொண்ட இக் குன்றில் ஏறுவது மிகவும் கடினமாகவே இருக்கும். அழுதைக் குன்றின் மேற்பகுதி ’கல்லிடும்குன்று’ என அறியப்படுகின்றது. இங்கு பக்தர்கள் அழுதையாற்றிலிருந்து எடுத்துவந்த கற்களை கீழ்நோக்கி எறிகின்றனர். கொல்லப்பட்ட மஹிஷியின் உடற்பகுதிகளைக் கீழ்நோக்கி எறிவதன் அறிகுறியாகக் கல்லெறியும் சடங்கு நடத்தப்படுகிறது.
