பூதத்திடன் முதல் கனவான் சொன்ன அந்தக் கதை

bookmark

"அன்பு பூதமே! நான் சொல்லப்போகும் இந்தக் கதை எனது வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்த சுவாரஸ்யமான கதை ஆகும். அதிலும் நான் கையில் வைத்திருக்கும் இந்த மானைப் பற்றியது" என்றார் முதல் கனவான்.

"பீடிகை எல்லாம் போதும். முதலில் கதையைச் சொல்" என்றது பூதம். உடனே அந்த முதல் கனவானும் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

"இதோ நான் வைத்திருக்கும் இந்த மான் உண்மையில் எனது மனைவி. மேலும், இவளுடன் தான் நான் பல வருடங்களாக இல்லறம் நடத்தி இருக்கிறேன். எனினும் எங்களுக்கு  குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டேன். அந்தப் பெண் அழகில் சிறந்து விளங்கினாள். அவளுடன் இனிமையாக தாம்பத்திய வாழ்வை நடத்தினேன். அதற்குப் பலனாக எனக்கு அழகான மகன் ஒருவன் பிறந்தான். நானும் அவனை அன்புடன் வளர்த்து வந்தேன். அவன் அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கினான். ஊரார் பலர் அப்படி ஒரு மகனைப் பெற்றதற்கு என்னைப் பல விதங்களிலும் பாராட்டினார்கள். அப்படி இருக்கும் சமயத்தில், எனது மகனுக்கு பதினெட்டு வயது நிரம்பி இருந்தது. நான் வியாபார விஷயமாய் வெளி நாடு செல்ல வேண்டிய அவசர சூழ்நிலை, முதல் மனைவியான இவளிடமும் சொல்லிவிட்டு, அத்துடன் என்னுடைய இரண்டாவது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு முதல் மனைவியிடம் அவள் மீது கொண்ட நம்பிக்கையில் வேண்டிக் கேட்டுக் கொண்டு புறப்பட்டேன். அவளும் அதற்கு சம்மதித்தாள். அது தான் நான் செய்த தவறு. அது எனக்குப் பிறகு தான் தெரிந்தது.

வியாபார விஷயமாக வெளியூர் சென்ற நான் பல மாதங்கள் கழித்துத் தான் சொந்த ஊர் திரும்பினேன். வந்ததும், வராததுமாக எனது மகனைத் தேடிச் சென்றேன். ஆனால், அவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அத்துடன் எனது இரண்டாவது மனைவியும் எங்கு சென்றாள் என்று நான் அறியவில்லை. உடனே முதல் மனைவியிடம் கோபத்துடன் வந்து,' உனது பாதுகாப்பில் தானே எனது மகனையும், இரண்டாவது மனைவியையும் விட்டுச் சென்றேன். ஆனால் இப்போது அவர்களைக் காண வில்லை. நீதான் அவர்களை ஏதோ செய்து உள்ளாய் என்று சந்தேகமாக உள்ளது. உண்மையைச் சொல் எனது இரண்டாவது குடும்பத்தை நீ என்ன செய்தாய்?" என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டேன்.

உடனே எனது முதல் மனைவியான இவள். எனது இரண்டாவது மனைவி பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும். அந்த சோகத்தில் இருந்த அவளுடைய மகன் எங்கோ சென்று விட்டதாகவும் கூறினாள். நானும் கூட எனது முதல் மனைவி சொல்வது தான் உண்மை என்று நம்பினேன்.

அத்துடன் எனது இரண்டாவது மனைவியை தொலைத்து விட்டேனே! மகனையும் பறி கொடுத்து விட்டேனே! என நான் அழாத நாள் இல்லை. காலங்கள் தான் ஓடியது. அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எங்கெங்கோ எனது இரண்டாவது குடும்பத்தைத் தேடி அலைந்து பித்துப் பிடித்தவன் போல ஆனேன்.

பின்னர் பலி விருந்துப் பண்டிகை வந்தது. இறைவனுக்குப் மாட்டை வெட்டி பலி கொடுக்கும் வழக்கம் எங்களுக்கு இருந்தது. அதனால், என்னிடம் வேலை பார்த்து வந்த மாடு மேய்ப்பவனை அழைத்து ஒரு கொழுத்த மாட்டை கொண்டு வருமாறு கூறினேன். அந்த மாடு மேய்ப்பவனும் நல்ல அழகான கொழுத்த மாட்டைக் கொண்டு வந்து நிறுத்தினான். அந்த மாடோ என்னைக் கண்டதும் அளவற்ற பாசத்தைக் காட்டியது. எனது பக்கத்தில் வந்து நக்கிக் கொடுக்க ஆரம்பித்தது. அத்துடன் என்னையே அது சுற்றிச், சுற்றி வந்தது. அந்தப் பசு எதனால் இப்படிச் செய்கிறது என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும், அந்தப் பசுவை நான் கொல்ல விரும்பவில்லை. காரணம் அந்தப் பசு என்னிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டது தான். எனவே நான் எனது வீட்டில் வேலை பார்க்கும் அந்த மாடு மேயப்பவனிடம், 'எனக்கு இந்தப் பசு வேண்டாம். ஓடிபோய், வேறு ஒரு பசுவைக் கொண்டு வந்து கொடு' என்றேன்.

ஆனால் அவனோ (மாடு மேய்ப்பவனோ) மறுமொழியாக என்னிடம்," இதைப் போல நல்ல கொழுத்த பசு வேறு இல்லை, ஆகவே இதனையே தாங்கள் வெட்டி பலி கொடுங்கள்" என்றான். எனவே நானும் வேறு ஒரு பசுவைத் தேட நேரம் இல்லாததால், அந்தப் பசுவையே வெட்டிக் கொன்றேன். ஆனால், ஆச்சர்யம் யாதெனில் அதில் தசைகளையே காண முடியவில்லை. வெறும் எலும்புகளும் நரம்புகளுமாகத் தான் இருந்தது. அவைகளும் கூட பார்ப்பதற்கு வித்யாசமாக மனிதர்களைப் போலவே இருந்தது. இதனால் ஏதோ தெய்வ குற்றம் நடந்து விட்டதை நான் உணர்ந்தேன். அதற்குப் பிரயாசித்தம் தேட நினைத்தேன்.

வெகு நேரம் யோசித்தப் பிறகு இன்னொரு கன்றைக் கொண்டு வரச் சொன்னேன். அந்த மாடு மேய்ப்பவனும் நல்ல ஒரு கொழுத்த கன்றைக் கொண்டு வந்தான். அந்தக் கன்றோ என்னைக் கண்டதும் நீண்ட நாள் பழகியதைப் போல எனது அருகில் வந்து வாலை உயர்த்திக் கொண்டு துள்ளித் துள்ளி ஓடி விளையாடியது. பின்னர் எனது முன்னர் வந்து நின்றபடிக் கண்ணீர் விட்டு அழுதது. ஆகவே, அந்தக் கன்றையும் வெட்ட எனக்கு மனம் வரவில்லை. அந்த நேரம் பார்த்துத் தகவல் அறிந்து எனது மனைவி என்னைத் தேடி அங்கு வந்தாள். அவள் பார்வையில் அந்தச் சின்னஞ்ச் சிறிய கன்று பட்ட மாத்திரத்தில் உடனே அதனைத் தான் பலியிட வேண்டும் என்று அடம் பிடித்தாள். அவள் ஏன் அவ்வாறு இந்த விஷயத்தில் அடம் பிடிக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் என்னால் அந்தக் கன்றைக் கொல்ல முடியவில்லை. ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது. மாடு மேய்ப்பவனை அழைத்து மீண்டும் அந்தக் கன்றை ஒட்டிக் கொண்டு செல்லும் படியாகக் கூறினேன். அவனும் அப்படியே ஒட்டிக் கொண்டு சென்றான்.

அன்று இரவு முழுவதும் எனக்கு உறக்கமே வரவில்லை.

மறுநாள் நான் தனியாக இருக்கும் சமயத்தில் மாடு மேய்ப்பவன் கண்கள் கலங்கியபடி என்னை வந்து வணங்கி நின்றான். அத்துடன் அவன் என்னிடம்,' முதலாளி! நான் ஒரு முக்கியமான விஷயத்தைத் தங்களிடம் பேச விரும்புகிறேன். அதனை நான் தங்களிடம் சொல்லித் தான் ஆக வேண்டும்' என்றான். அது என்னவாக இருக்கும் என்று எண்ணிய நான் அவன் கூறத் தொடங்கிய விஷயத்தை ஆவலுடன் கேட்கத் தொடங்கினேன்.

மாடு மேய்ப்பவனும் விஷயத்தை மெல்ல இவ்வாறு கூறத் தொடங்கினான்.

'முதலாளி! எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். எங்கள் வீட்டுப் பக்கத்திலேயே ஒரு வயதான பாட்டி இருக்கிறார்கள். அவர்கள் அனைத்து மந்திர வித்தைகளிலும் கை தேர்ந்தவர்கள். ஆனால், அதே சமயத்தில் மிகவும் நல்லவர்கள். அவர்களுடம் எனது மகள் நல்ல முறையில் பேசிப் பழகி வந்தாள். அந்தப் பாட்டிக்கு வாரிசுகள் ஏதும் இல்லாத காரணத்தால் எனது மகளையே அவர்களது மகளாக பாவித்துத் தனக்குத் தெரிந்த அனைத்து விதமான மந்திர வித்தைகளையும் எனது ஒரே மகளுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அவளும் மந்திர வித்தையில் கை தேர்ந்து விளங்கத் தொடங்கினாள்.

இப்படி இருக்கும் சமயத்தில் நேற்று தாங்கள் பலி இட இருந்த அந்தப் பாசமான கன்றுக் குட்டியை எனது வீட்டுக்கு ஓட்டிச் சென்றேன். அந்தக் கன்றுக் குட்டியைக் கண்ட மாத்திரத்தில் எனது மகள் தனது முகத்தை மூடிக் கொண்டாள். அத்துடன் வெட்கமும் அடைந்தாள். பின்னர் அவள் அழ ஆரம்பித்தாள்.' காரணமே இல்லாமல் ஏன் எனது மகள் இப்படி நடந்து கொள்கிறாள்?' என்று யோசித்தேன் நான். உடனே எனது மகள் அவள் அவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணத்தைக் கீழ்க்கண்ட முறையில் கூறத் தொடங்கினாள்.

'அப்பா, இந்தக் கன்றுக் குட்டி யார் தெரியுமா? நம்முடைய எஜமானருடைய மகன் ஆவார். மேலும், இவருடைய மாற்றான் தாய் தான் இவரையும் இவருடைய தாயாரையும் கன்றாகவும் பசுவாகவும் மாற்றிவிட்டார். இதனை நினைத்துத் தான் நான் வேதனை அடைந்து அழுதேன். மேலும் நேற்று தங்கள் எஜமானர் பலி கொடுத்தது மாட்டின் ரூபத்தில் இருந்த தனது இரண்டாவது மனைவியைத் தான்" என்ற விவரத்தை எடுத்துக் கூறினாள்.

மேற்கண்ட இந்தச் செய்தி எனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தது. மேலும், இந்தச் செய்தியைத் தான் தங்களிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். எப்போது விடியும் என்று காத்திருந்து இப்போது வந்துத் தங்களிடம் சொல்லிவிட்டேன்' என்று சொல்லி முடித்தான்.

உடனே எனது வீட்டு ஆடு மேய்ப்பவன் சொன்ன மேற்கண்ட வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் அவனது வீட்டிற்கு விரைந்தேன். ஒரு புறம் எனது இரண்டாவது மனைவியை நானே கொன்று விட்டேனே! என்ற வருத்தம் எனக்கு இருந்தாலும் எனது மகனை வெகு நாட்கள் கழித்துப் பார்க்க இருக்கும் சந்தோஷம் எனக்குள் இருந்தது.

நான் அப்போது அடைந்த மகிழ்ச்சி கொஞ்ச நஞ்சம் அல்ல. அந்த சந்தோஷத்துடனே நான் என்னிடம் வேலை பார்த்த அந்தக் குடியானவனின் வீட்டை அடைந்தேன். மாடு மேய்ப்பவனுடைய மகள் என்னை அன்புடன் வரவேற்றாள்.

'என்னம்மா உனது அப்பா சொல்வதெல்லாம் உண்மையா?' என்று கேட்டேன்.

'எனது அப்பா சொல்வது அனைத்தும் உண்மை தான். மேலும், கன்றுக் குட்டி வடிவத்தில் இங்கு இருப்பவர் உங்கள் அருமை மகன் தான்' என்றாள்.

உடனே நான் அவளிடம், 'அம்மா, நீ ஏதோ பாட்டியிடம் இருந்து மந்திரங்களை எல்லாம் கற்று வைத்து இருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். அதனைப் பிரயோகித்து எனது மகனை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டுத் தர முடியுமா? நீ அப்படிச் செய்தால் உனக்கு எனது பாதி செல்வங்களைத் தருகிறேன். அத்துடன் நீ கேட்பது எதுவாயினும் நான் உனக்குத் தருகிறேன்' என்றாள்.

உடனே மாடு மேய்ப்பவனின் மகள் என்னிடம்,' ஐயா, எனது இரண்டு கோரிக்கைகளைத் தாங்கள் நிறைவேற்றிக் கொடுத்தால், உடனே உங்கள் மகனை நான் பழைய படி மாற்றிக் கொடுக்கிறேன்' என்றாள்.

அதன் படியே நானும் அவளது கோரிக்கைகள் எதுவாயினும் அதனை நிறைவேற்ற ஒப்புக் கொண்டேன். அதன் படி அந்தப் பெண்ணும் தனது இரண்டு கோரிக்கைகளையும் எடுத்து முன் வைத்தாள். அதன் அடிப்படையில் தனது முதல் கோரிக்கையாக,' தங்கள் மகனுக்கு என்னை மணம் முடித்து வைக்க வேண்டும்' என்றாள். பிறகு இரண்டாவது கோரிக்கையாக, 'இத்தனை கொடுமைக்கும் காரணமாக இருந்தவர் தங்கள் முதல் மனைவி தான், எனவே அவர்களை நான் எனது விருப்பப் படி உருமாற்றிக் கொள்ள உத்தரவு தர வேண்டும். காரணம் அவர்களால் எனக்கும், எனது வருங்காலக் கணவருக்கும் பிற்காலத்தில் நிச்சயம் தொந்தரவுகள் வரலாம்'  என்றாள்.

அவள் கூறியபடி நான் எனது மகன் மீண்டும் பழைய படி வந்தால் போதும் என்ற நினைப்பில் அவள் கூறிய அனைத்தையும் ஏற்றுக் கொண்டேன். அத்துடன் அவளது அனைத்து நிபந்தனைகளுக்கும் பச்சைக் கொடியை காட்டினேன்.

உடனே அந்தப் பெண் ஓடிச் சென்று தான் வைத்திருந்த மந்திர நீரைக் கொண்டு வந்தாள். சில மணி நேரம் மந்திரங்களை சொல்லி தியானித்தாள். அந்த மந்திர நீர் தங்கத்தின் நிறத்தில் ஜொலித்தது. அத்துடன் பேரொளியை வெளியிட்டது. பிறகு அந்நிலையில் இருந்த தண்ணீரை கன்றாக இருந்த எனது மகனின் மீது தெளித்தாள். அடுத்தகணம் எனது மகன் பழையபடி தனது உருவத்தை அடைந்தான். அதைக் கண்டு நான் மகிழ்ந்தேன்.

எனது உரு மாறிய மகனும் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துச் சொன்னான். அதைக் கேட்டு நான் கொதித்துப் போனேன். எல்லாவற்றிகும் காரணமான எனது முதல் மனைவியை நான் தண்டிக்க நினைத்தேன்.

அதன் பொருட்டு மாடு மேய்ப்பவனின் மகளை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அப்போது எனது மூத்த மனைவி நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளை மந்திர நீரைக் கொண்டு மானாக மாற்றினாள் எனது அந்த வருங்கால மருமகள். நானும், இது எனது முதல் மனைவிக்குத் தேவை தான் என்று நினைத்து எனது மருமகளை எதுவும் கூறாமல் அவள் செய்ததை மனப்பூர்வமாக ஆதரித்தேன். பிற்பாடு எனது சொத்துக்கள் அனைத்தையும் எனது மகனுக்கு முறைப்படி எழுதி வைத்தேன். அத்துடன் எனது மகனுக்கும் அந்த இடைப் பெண்ணுக்கும் கோலாகலமாக திருமணத்தை நடத்தி வைத்தேன். அதில் இருந்து நான் இந்த மானுடன் ஊர் ஊராகச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறேன். என்ன செய்ய இவளும் கூட எனது மனைவி தானே! அதனால் இவளை அப்படியே விட்டு விட எனக்கு விருப்பம் இல்லை' என்று மானுடன் வந்த முதல் கனவான் தனது கதையை பூதத்திடம் முழுமையாகக் கூறி முடித்தார்.

அந்தக் கதையை முழுவதுமாகக் கேட்ட பூதம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அருமையான கதையை சொன்னீர்கள் என்று கூறி அந்த முதல் கனவானைப் பாராட்டியது. அத்துடன் அந்த வணிகனுக்குத் தான் தர இருந்த தண்டனையில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்வதாகவும் அந்த பூதம் கூறியது.

அதன் பின்னர், வேட்டை நாய்களுடன் வந்த இரண்டாவது கனவான் அந்த பூதத்திடம் கீழ்க்கண்ட முறையில் பேசத் தொடங்கினார்.

"அன்புள்ள பூதமே, நாய்களாக உருமாறி இருக்கிற எனது இந்த இரு சகோதரர்களின் கதையை உனக்குக் கூறுகிறேன். அது இன்னும் சுவாரஸ்யமான கதை. நீ அதனைக் கேட்டால் துள்ளிக் குதிப்பாய். ஒருவேளை நான் கூறியபடி அது உனக்கு அதிக சந்தோஷத்தை தந்தாள், அதன் பொருட்டு நீ அதற்குக் கைமாறாக இந்த வணிகனுக்கு நீ அளிக்க இருக்கும் தண்டனையில் மேலும் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்ள வேண்டும்" என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த பூதமும் ஒப்புக் கொண்டது.

உடனே இரண்டாவது கனவான் தனது சகோதரர்கள் வேட்டை நாய்களாக மாறிய கதையைக் கூறத் தொடங்கினார் என இப்படியாக அரசர் ஷாரியாரிடமும் தனது தங்கையிடமும் கதையைக் கூறிக் கொண்டு இருந்த ஷாரஜாத் விடிந்து விட்டதை எண்ணியவாறு பாதியில் கதையை நிறுத்தி விட்டு அரசர் ஷாரியரை கலவரத்துடன் பார்த்தாள். ஆனால், ஷாரியர் அந்த வேட்டை நாய்களின் கதையைக் கேட்க விருப்பம் கொண்டு காணப்பட்டார்.

ஷாரஜாத்தின் சகோதரியோ, "அக்கா! கதையை சொல்லேன். ஏன் நிறுத்தி விட்டாய்? கேட்க ஆவலுடன் இருக்கிறேன்" என்றாள்.

உடனே ஷாரஜாத் தனது சகோதரியான துன்யாஜாத்திடம், "அருமைத் தங்கையே பொழுது விடிந்து விட்டது. இனிமேலும் என்னால் கதையைத் தொடர முடியாது. ஒரு வேளை நமது மன்னர் இன்று ஒரு நாள் எனக்கு உயிர் பிச்சை அளித்தாள். நான் இன்றைய தினம் இரவு மேற்கொண்டு கதையைத் தொடர்கிறேன்" என்றாள்.

ஷாரஜாத்தின் வார்த்தையைக் கேட்ட மன்னரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அன்றைய தினம் அவளை எதுவும் செய்யாமல் தனது தினசரி வேலைகளை முடிக்கக் கிளம்பினார்.

மறுபுறம் ஷாரஜாத் உயிருடன் இருப்பதைப் பார்த்த அவளது தந்தை ஆச்சர்யம் அடைந்து மகளிடம் விவரத்தைக் கேட்டு அறிந்தார். பிறகு எல்லாம் வல்ல இறைவனிடம் தனது மகளை நல் புத்தி கொடுத்து காத்ததற்கு நன்றியை தெரிவித்தார்.

அன்றைய பொழுதும் நல்ல விதமாகப் போனது. மாமன்னர் ஷாரியார் விரைவாகத் தனது வேலையை முடித்து விட்டு வேட்டை நாய்களின் கதையை கேட்க ஓடோடி வந்தார். ஷாரஜாத்தும் அந்த வேட்டை நாய்களின் கதையை அரசரிடம் கூறத் தொடங்கினாள். (அப்போது உடன் அவளது தங்கை துன்யாஜாத்தும் இருந்தாள்)