இரண்டாவது கனவானின் சகோதரர்கள் வேட்டை நாய்களாக மாற்றப்பட்ட கதை
இரண்டாவது கனவான் பூதத்திடம் வேட்டை நாய்களின் கதையை இவ்வாறு கூறத் தொடங்கினான்.
"அன்பார்ந்த பூதமே! இதோ என்னுடன் இருக்கும் நாய்கள் வேறு யாரும் இல்லை எனது சொந்தச் சகோதரர்கள் தான். இந்த உருவத்தை இவர்கள் அடைந்ததற்கு அவர்கள் எனக்குச் செய்த வினை தான் காரணம். இன்னும் சொல்லப் போனால் நான் இவர்களை மன்னிக்கத் தயாராக இருந்தாலுமே இறைவன் இவர்களை தண்டிக்கத் தயங்கவில்லை. அப்பேற்பட்ட பாவத்தை இவர்கள் செய்து இருக்கிறார்கள். ஆம், பேராசை, பொறாமை, உதவி செய்தவர்களை துன்புறுத்தி இன்பம் காணும் எண்ணம் என அனைத்தையும் உடையவர்கள் மனிதர்களாக இருந்தாலுமே நாயினும் கீழான குணத்தைக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு போதும் நல்ல கதி வருவதில்லை. இதனை நான் கூறப் போகும் கதையின் மூலமாக நீயும் கூட அறிந்து கொள்ளலாம்" என்று சொன்னார்.
அதைக் கேட்ட பூதம்," எனக்கு உடனே கதையைக் கேட்க வேண்டும் போல் இருக்கிறது. உடனே கதையைக் கூறு" என்றது.
அதன் அடிப்படையில் அந்த இரண்டாவது கனவான் கதையைத் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்.
ஒரு கிராமத்தில் நாங்கள் மூன்று சகோதரர்கள் வசித்து வந்தோம். எங்களது தந்தை எங்களை மிகவும் அன்பாகத் தான் வளர்த்து வந்தார். அவர் பெரும் வணிகராக இருந்தார். அவரிடம் இருந்து நல்ல முறையில் நான் தொழிலைக் கற்றுத் தேர்ந்தேன். ஆனால், எனது இரு சகோதரர்களும் சோம்பேறிகளாகவும், சிற்றின்பப் பிரியர்களாகவும் இருந்தார்கள். தந்தையின் பேச்சை அவர்கள் பிறந்தது முதல் என்றுமே மதித்தது கிடையாது. இந்நிலையில் எனது சகோதரர்கள் இருவரைப் பற்றியே கவலைப் பட்டு, கவலைப் பட்டு எனது தந்தை நோய் வாய்ப்பட்டார். படுத்த படுக்கையாக ஆனார். எனினும் சாகும் சமயத்திலும் தனது கடமையை நல்ல முறையில் நிறைவேற்ற நினைத்த எங்களது தந்தை. அவர் காலமாகும் சமயத்தில் மூவாயிரம் தினார்களை எங்களுக்கு ஆஸ்த்தியாக விட்டு விட்டுப் போனார். அத்துடன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அந்த பணத்தை நாங்கள் மூவரும் ஆளுக்கொரு பங்காக பிரித்துக் கொண்டோம். அதன் படி எனக்கு ஆயிரம் தினார்கள் பங்காகக் கிடைத்தது. நான் உள்ளூரிலேயே ஒரு மளிகைக் கடையை வைத்து நடத்தினேன். எனது தந்தையிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட வியாபார நுணுக்கங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
ஆனால் எனது இரண்டு அண்ணன்களும் கேளிக்கையில் ஈடுபட்டு வந்தனர். பல பெண்களுடன் தொடர்பு கொண்டு உல்லாசமாகப் பொழுதைக் களித்தனர். அத்துடன் கெட்ட நண்பர்களின் தூண்டுதலால் உலகத்தை சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறி வெளிநாடு சென்றனர். நானோ உள்ளூரில் வாழ்ந்த படி எனது வியாபாரத்தை பெருக்கி வந்தேன். ஆயிரம் தினார்களைக் கொண்டு நான் ஆரம்பித்த தொழில் வளர்ச்சி பெற்று இருபதாயிரம் தினார்களை மாத வருமானமாகப் பெற்றேன். அதாவது அந்த அளவுக்கு வியாபாரம் செழித்தது.
இந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் என்னுடைய கடையில் வியாபாரத்தை செய்த போது யாரோ இருவர் தாடியும், மீசையுமாக பிச்சைக் காரக் கோலத்தில் என்னுடைய கடைக்கு வந்தார்கள். அவர்கள் என்னைக் கண்டு பரிதாபமாக நின்றனர்.
அந்த இருவரும் பிச்சை கேட்கத் தான் வந்து உள்ளார்கள் என்று நினைத்து அவர்களுக்கு சில தினார்களை பிச்சையாகப் போட்டேன். ஆனால், அவர்களோ அதனை வாங்க மறுத்து, "அன்புத் தம்பியே எங்களை உனக்குத் தெரியவில்லையா? நீ கூட எங்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி நாங்கள் மாறி விட்டோமா?" என்று கூறி அழுதார்கள்.
அதன் பிறகே அவர்கள் இருவரும் எனது சகோதரர்கள் என்பதை நான் கண்டு கொண்டேன். வெளிநாடு சென்ற சமயத்தில் தங்களது பொருளை எல்லாம் இழந்துவிட்ட கதையை அவர்கள் கூறி அழுதவுடன் அவர்கள் மீது நான் கருணை கொண்டேன். அவர்களை அழைத்து எனது வீட்டில் நான் நல்ல முறையில் உபசரித்தேன். பின்னர் நான் சம்பாரித்து வைத்திருந்த பணத்தில் இருந்து ஆளுக்கொரு ஆயிரம் தினார்களைக் கொடுத்தேன். அதனைக் கொண்டு இருவரும் தனித்தனியே ஒரு கடையை ஆரம்பித்து நடத்தத் துவங்கினார்கள். நானும் இப்போதாவது சகோதரர்களுக்கு நல்ல புத்தி வந்ததே என்று நினைத்து இறைவனிடம் நன்றி கூறினேன்.
இப்படியே கொஞ்ச நாட்கள் மெல்ல நகர்ந்தது. அவர்கள் இருவரும் ஒரு நாள் மீண்டும் என்னிடம் வந்தார்கள். மீண்டும் வெளிநாடு சென்று வியாபாரம் செய்யப் போவதாகக் கூறினார்கள். ஆனால், இந்த முறை அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். நான் முதலில் போக மறுத்தாலும் பிற்பாடு எனது சகோதரர்கள் இருவரும் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவர்களுடன் வெளிநாடு செல்ல நானும் சம்மதித்து எனது தொழிலை நம்பிக்கையான நல்ல வேலையாளிடம் சிறிது நாள் பார்த்துக் கொள்ளுமாறு ஒப்படைத்து விட்டுக் கிளம்பினேன். உடன் கணிசமான தொகையையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். அதனைக் கொண்டு சில பொருள்களை வாங்கி வெளிநாட்டில் விற்றோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை பெற்றோம். பின்னர் பல மாதங்கள் கழிந்ததால் நாங்கள் மீண்டும் தாய் நாடு செல்லத் தீர்மானித்தோம். அதன் பொருட்டுக் கடற்கரைக்கு வந்தோம்.
அப்போது கந்தல் ஆடையை உடுத்திய ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பார்க்கப் பிச்சைக் காரி போலத் தோற்றம் அளித்தாலும், அவளது முகத்தில் ஒரு தெய்வீக ஒளியைக் கண்டேன். அந்தப் பெண் மிகவும் இளவயதுடைய பெண்; அத்துடன் அழகியாகவும் இருந்தாள்.
அந்த சுந்தரி என்னைப் பார்த்தமட்டில் எனது கைகளைப் பற்றிக் கொண்டாள். நான் எனது கைகளை உதர விரும்பவில்லை. அத்துடன் அவளது கனிவான பேச்சு எனக்கு ஒரு வித மயக்கத்தை அளித்தது. அவள் தனது அன்பார்ந்த அமுத மொழிகளை என்னிடம் கூறத் தொடங்கினாள்.
"ஐயா, நீங்கள் என்னை தயை கூர்ந்து ஆதரிக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் நான் எக்காலமும் உங்களுக்கு நன்றி உடையவளாக இருப்பேன். அத்துடன் உங்களுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் செய்வேன்" என்றாள்.
"நான் உனக்கு எந்தவகையான உதவியையும் பிரதிபலன் பார்க்காமல் செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறேன். உனக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும். நிச்சயம் நீ தவறாக எதையும் கேட்கக் கூடிய பெண் இல்லை என்பதை உனது முகமே எனக்கு சொல்கிறது. அத்துடன் நீ நல்ல பெண்ணாகத் தான் இருப்பாய் என்றும் எனது உள் மனம் என்னிடம் கூறுகிறது. அதனால் நீ என்னிடம் தைரியமாக எதை வேண்டுமானாலும் கேட்கலாம். தயங்காதே!" என்று அந்தப் பெண்ணிடம் நான் அன்புடன் பதில் கூறினேன்.
உடனே அவள் என்னிடம், "அன்பரே! அப்படியானால் தாங்கள் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படித் தாங்கள் என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டால். நான் தங்களுக்கு மனைவியாக மட்டும் அல்ல, வேலைக்காரியாகவும் இருப்பேன்" என்றாள்.
அவளின் வார்த்தைகளைக் கேட்ட நானும் அவளை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்தேன். அத்துடன் அவளுக்கு நல்ல உடைகளை வாங்கிக் கொடுத்தேன். வயிறார உண்ணக் கொடுத்தேன். பிறகு அவளை மணந்து கொண்டேன். அத்துடன் அவளை அழைத்துச் செல்லத் தீர்மானித்தேன். ஆனால், இது எதுவுமே என்னுடன் இருந்த எனது சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை. எனக்கு எங்கே வாரிசு உருவாகி விடுமோ என்று பயந்தார்கள். அவர்களுக்கு எப்போதுமே நான் சம்பாதித்த செல்வத்தின் மீது ஒரு கண் இருந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் நானோ முட்டாள் தனமாக எனது உடன் பிறப்புகளை நம்பி வந்தேன்.
அத்துடன் அக் கப்பல் பயணத்தின் போதும் நான் எனது மனைவியை நல்ல முறையில் கவனித்து வந்தேன். இரவு, பகலாக அவளுடனேயே இருந்து வந்தேன். இதனால் என் மீது அதிக ஆத்திரம் கொண்ட சகோதரர்கள் ஒரு கட்டத்தில் என்னைக் கொல்லவே தீர்மானித்து விட்டனர்.
ஒரு நாள் கப்பலில் நானும் எனது மனைவியும் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தோம். அது ஒரு நள்ளிரவு வேளை. கப்பல் மெல்லக் கடலில் நகர்ந்து கொண்டு இருந்தது. எனது சகோதரர்கள் இருவரும் விரைந்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னையும், எனது மனைவியையும் வாயைப் பொத்தியவாறு அடித்துத் தூக்கிச் சென்று நடுக் கடலில் வீசி எறிந்தார்கள்.
நானும் எனது மனைவியும் கடலுக்கு அடியில் சென்று கொண்டு இருந்த சமயம் நான் செய்வதறியாது திகைத்தேன். அப்போது எனது மனைவி அவளது உண்மையான ரூபத்தை எடுத்தாள். ஆம்! அப்போது தான் எனக்கே தெரியும் அவள் ஒரு பெண் பூதம் என்று.
அப்படி பூதமாக மாறியவள் என்னைப் பத்திரமாகக் கொண்டு போய் ஒரு தீவில் சேர்த்தாள். பின்னர் அவள் எங்கே போனாள் என்று தெரியவில்லை. அடுத்த நாள் காலை விடிந்தது நான் சாப்பிட உணவுப் பதார்த்தங்களை கொண்டு வந்து கொடுத்தாள். நான் அதனை மகிழ்ச்சியுடன் உண்டு அவளுக்கு நன்றியைத் தெரிவித்தேன். அத்துடன் அந்த நிலையிலும் அவளை நான் விரும்பினேன். அதனை அவள் உணர்ந்தவளாய் என்னிடம் பேசத் தொடங்கினாள், "ஐய்யா எனக்கு உதவி செய்தவர்களுக்கு நான் என்றுமே நன்றி உள்ள அடிமையாக இருப்பேன். அதன்படி தண்ணீரில் விழுந்து சாக இருந்த உங்களைக் காப்பற்றும் பாக்கியத்தைப் பெற்றேன். அத்துடன் நான் உங்களுக்கு ஒரு வாக்கை அளிக்கிறேன் நமக்குத் துரோகம் செய்த உங்கள் சகோதரர்களை நான் கொல்லாமல் விட மாட்டேன்" என்றாள்.
நானோ, அப்பொழுதும் கூட எனது அந்த சகோதரர்களை நான் மிகவும் விரும்பியதன் காரணமாக அவர்களை கொல்லக் கூடாது என்று அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டேன். அத்துடன் அவளால் எனது சகோதரர்களின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொண்டேன். அவளும் அப்படியே சத்தியம் செய்தாள்.
பின்னர், பெண் பூதமாக மாறிய எனது மனைவி என்னைத் தனது கைகளில் ஏந்தியபடி வான் வழியாகப் பறந்து சென்று எனது வீட்டு மொட்டை மாடியில் கொண்டு விட்டுச் சென்றாள். அதன் பின்னர் நான் எதைப் பற்றியும் நினைக்காமல் எனது வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்தினேன். அத்துடன் பலனை எதிர்பார்க்காமல் எனது கடமையை மட்டும் கண்ணும், கருத்துமாக செய்து வந்தேன்.
அப்படி இருக்கும் சமயத்தில், ஒரு நாள் எனது வியாபாரத்தை முடித்து விட்டு நான் வீடு திரும்பிய சமயத்தில், அங்கு இரண்டு நாய்கள் கட்டப்பட்டு இருப்பதைக் கண்டேன். என்னைக் கண்டதும் அவைகள் இரண்டும் குதித்து ஆர்பாட்டம் செய்யத் தொடங்கின. எனக்கோ ஒன்றுமே தெரியவில்லை. எதுவுமே புரியவில்லை. அந்த நாய்களை யார் எனது வீட்டு வாசலில் கட்டி இருப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.
அந்த சமயத்தில் மீண்டும் எனது மனைவி எனக்கு முன்னாள் தோன்றினாள். அவள் என்னிடம், "இந்த நாய்களாய் இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை உங்களது நயவஞ்சக சகோதரர்கள். நான் எவ்வளவோ தடுத்தும் கூட எனது சகோதரிகளில் ஒருத்தி எனது கதையைக் கேட்டு, தங்கள் சகோதரர்கள் இருவரையும் நாயாக மாற்றி என்னிடம் கொண்டு வந்தாள். அத்துடன் நான் தான் நாய்களாக மாறிய தங்களது சகோதரர்களை உங்கள் வீட்டு வாசலில் கட்டிவிட்டுச் சென்றேன். இன்னும் பதினைந்து ஆண்டுகள் கழித்து நானே உங்கள் சகோதரர்கள் இருவரையும் பழைய நிலைக்கு மாற்றுவேன். என்னை நம்புங்கள்" என்று கூறிவிட்டுச் சென்றாள்.
இப்படியாக இந்த நிகழ்ச்சி நடந்து பதினைந்து ஆண்டுகள் ஆகப் போகின்றன. எனது சகோதரர்களின் நிலை எனக்கு பார்க்கப் பார்க்கப் பரிதாபத்தைத் தந்தது. அதனால் தான் நான் எனது மனைவியை (அதாவது அந்தப் பெண் பூதத்தை) தேடிச் சென்று கொண்டு இருக்கிறேன். அத்துடன் எங்காவது தென்பட மாட்டாளா என்று ஏங்கித் தவித்துக் கொண்டு இருக்கிறேன்.
அப்போது வழியில் தான் இந்த வணிகனின் சோகக் கதையைக் கேட்டேன்; அப்படியே இங்கு இருந்துவிட்டேன்' என்று தனது கதையை முழுவதுமாக கூறி முடித்தார் அந்த இரண்டாவது கனவான்.
அதுவரையில் அந்தக் கதையை கேட்டுக் கொண்டு இருந்த பூதம், "உண்மையிலேயே, இது பாராட்டக் கூடிய கதை தான். வியாபாரியின் தண்டனையில் மேலும் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்கிறேன்" என்றது.
பிறகு கோவேறு கழுதையுடன் வந்தவர் அந்த பூதத்திடம் இவ்வாறு பேசத் தொடங்கினார்.
"அன்புக்கு அடிபணியும் இயல்பு கொண்ட பூதமே, நான் கூறப் போகும் கதையும் ஒரு சுவாரஸ்யமான கதை தான். ஒருவேளை அதுவும் உனக்குப் பிடித்து இருந்தாள். நீ இந்த வணிகனை முழுவதுமாக மன்னித்து விட்டு விட வேண்டும்" என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார்.
அதற்கு அந்த பூதமும் மூன்றாவது கனவானிடம், "நீர் சொல்லும் கதையானது சுவாரஸ்யம் நிறைந்த கதையாக இருக்குமே ஆனால், நான் உனக்கு வாக்களிக்கிறேன், இந்த வணிகனை நான் மன்னித்து விட்டு விடுகிறேன்" என்றது.
உடனே மூன்றாவது கனவானும் தனது கதையைக் கூறத் தொடங்கினார்.
