பூக் கொய் படலம் - 995

bookmark

ஓர் அரசன் மதயானைபோல் திரிதல்

தேவிமாரொடு திரிந்த மன்னர்
 
995.

திண் தேர் அரசன் ஒருவன். குலத்
   தேவிமார்தம்
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர்
   உண்கண் எல்லாம்
கண்டு ஆதரிக்கத் திரிவான். மதம்
   கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்கத் திரி மா
   மத யானை ஒத்தான்.
 
குலத் தேவியர் தம் - உயர்குலத்தைச் சார்ந்த (தன்) மனைவியரின்;
ஒண்  தாமரை வாள்  முகத்துள்  -  அழகிய தாமரை போன்ற ஒளி
பொருந்திய  முகங்களில்; மிளிர்  உண்கண் எல்லாம் - விளங்குகின்ற
மையுண்ட  கண்கள்  யாவும்; கண்டு  ஆதரிப்பத்  திரிவான்  - தன்
பேரழகைப்   பார்த்து.   விரும்புமாறு   திரிபவன்  ஆகிய;  திண்தேர்
அரசன்  ஒருவன்  -  திண்ணிய   தேர்  ஊர்ந்து  செல்லும்  அரசன்
ஒருவன்;  வண்டு  ஆதரிக்க  - வண்டுகள் விரும்புமாறு; திரி மாமத
யானை  ஒத்தான் - திரிகின்ற மிகு மதங்கொண்ட யானை ஒன்றினைப்
போன்றவன் ஆயினான். 

யானைகளின்     மதநீரை    யுண்ணுதற்கு.    வண்டுகள்  யானை
செல்லுமிடம்   எல்லாம்   உடன்  செல்வது   போன்று   இம்மன்னன்
செல்லுமிடம் எல்லாம் அவன் தேவிமார்கள்  விழி  வண்டுகளும் உடன்
திரிய  அழகுச் செருக்கில் அவன் உலவினான்  என்பதாம்.  யானைக்கு.
வண்டுகள் உடன் திரிய அதன்  மதம்  காரணம்  ஆயிற்று.  இவனுக்கு 
மகளிர்      விழி       வண்டுகள்      உடன்     திரிய    இவன்
அழகு  காரணம்  ஆயிற்று.  வண்டுகளும்.  விழிகளும்  விருப்பத்தோடு
உடன் திரிகின்றன என்பார் “ஆதரிக்க” என்றார்                 21