பூக் கொய் படலம் - 996
ஒத்த பங்கு பெற்ற மனைவியர் ஊடல்
மனைவியர் சினந்து புலத்தல்
996.
சந்திக் கலா வெண் மதி வாள் நுதலாள்தனக்கும்.
வந்திக்கல் ஆகும் மடவாட்கும். வகுத்து நல்கி.
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப. மென் பூச்
சிந்தி. கலாப மயிலின். கண் சிவந்து. போனார்.
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் - பழித்தற்கு ஆகாத
உருவத்தினையுடைய ஒருவன்;சந்திக் கலா வெண்மதி வாள் நுதலாள்
தனக்கும் - சந்தியா காலத்தில் தோன்றி சில கலைகளை மட்டும்
கொண்டுள்ள வெண்ணிறப் பிறைச் சந்திரன் போன்ற நெற்றி கொண்ட
(தன்) ஒரு மனைவிக்கும்; வந்திக்கல் ஆகும் மடவாட்கும் - எவரும்
வந்திக்கத்தக்க பேரழகியான மற்றொரு மனைவிக்கும்; வகுத்து நல்கி
நிற்ப - (தான் கொய்த மலர்களைச்) சமமாகப் பகிர்ந்து கொடுத்து
நிற்கும் போது; மென் பூச் சிந்தி - (அவ்விரு மனைவியரும் அவன்
தந்த) அம்மெல்லிய மலர்களைத் (தரையிற்) கொட்டிவிட்டு; கண்
சிவந்து - அவன்மேல் (கோபங்கொண்டு) கண்கள் சிவந்தவராகி; கலாப
மயிலின் போனார் - தோகை மயில் போல (அவன் முன் நிற்க
விரும்பாமல்) அப்பால் போய்விட்டனர்.
கணவன் தான் பறித்த மலர்களை முதலில் தந்ததால் ஒருத்தியும்.
சமமாகத் தந்ததால் ஒருத்தியும் “சினங் கொண்டு ஊடினார்கள்.
தோகை மயில் கனம் தாளாமல் நடப்பது போல சமமாகத் தந்ததால்.
அவளுக்கு நான் சமமா? என்று ஊடினாள். இவர்கள் சினந் தாளாமல்
நடந்தனர் என்பார். “கலாப மயிலிற் கண் சிவந்து போனார்” என்றார்.
கலாபம் - மயில்தோகை. 22
