பூக் கொய் படலம் - 991
புலவி நுணுக்கம்
991.
செம்மாந்த தெங்கின் இளநீரை. ஓர்
செம்மல் நோக்கி.
‘அம்மா! இவை மங்கையர் கொங்கைகள்
ஆகும்’ என்ன.
‘எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?’
என்று. ஒர் ஏழை.
விம்மா. வெதும்பா. வெயரா. முகம்
வெய்துயிர்த்தாள்.
செம்மாந்த தெங்கின் இளநீரை - உயர்ந்தோங்கி நின்ற
தென்னையின் இளநீரையுடைய காயை; ஓர் செம்மல் - ஒரு
தலைவன்; ‘அம்மா! - ‘என்ன வியப்பு!; இவை மங்கையர்
கொங்கைகள் ஆகும்’ என்ன - இவ்விளநீர்க் காய்கள் மங்கையரின்
கொங்கைகளுக்கு ஒப்பாகும் என்று கூற; எம் மாதர் கொங்கைக்கு
இவை ஒப்பன - (அது கேட்ட அவன் மனைவி) இவ்விளநீர்கள் நீ
பார்த்த எந்த எந்த மங்கைகளின் கொங்கைகளுக்கு ஒப்பாவன? ;
என்று - என்று கேட்டு; விம்மா - விம்மி; வெதும்பா - மனம்
கொதித்து; முகம் வெயரா - முகம் வெயர்த்து; வெய்துயிர்த்தாள் -
வெப்பப் பெருமூச்சு விட்டாள்.
இளநீரை மங்கையர் கொங்கைக்குவமித்தல் மரபாதலால். “இவை
மங்கையர் கொங்கைகள் ஆகும்” என்றான் தலைவன். ஆனால்.
‘இவை மங்கையே! நின்கொங்கைகள் ஆகும்’ என்னாமல். இவை
மங்கையர் கொங்கைகள் ஆகும்’ எனப் பன்மையாற் கூறியது.
தலைவியின் ஊடற்கு ஏதுவாயிற்று. “யாரினும் காதலம் என்றேனா
ஊடினாள் யாரினும் யாரினும் என்று” எனும் அருமைத் திருக்குறள்
(1314) இங்கு நினையற் பாலது. தன் கணவன் தூய்மையை வீணாக
ஐயுறுகிறாள் என்பார் ஏழை என்றார். 17
