பூக் கொய் படலம் - 992

bookmark

கண் புதைத்தல்

992.

‘போர்’ என்ன வீங்கும் பொருப்பு அன்ன
   பொலங் கொள் திண்தோள்
‘மாரன் அனையான். மலர் கொய்து
   இருந்தானை. வந்து ஒர்;
கார் அன்ன கூந்தல். குயில் அன்னவள்.
   கண் புதைப்ப.
‘ஆர்?’ என்னலோடும். அனல் என்ன
   அயிர்த்து உயிர்த்தாள்.
 
போர்     என்ன வீங்கும் - போர் என்று சொன்ன அளவிலேயே
(மகிழ்ச்சியில்)  பூரித்துப்   பெருக்கும்;  பொருப்பன்ன - மலையினைப்
போன்ற;  பொலம்  கொள்  - அழகு வாய்ந்த; திண் தோள் - வலிய
தோள்களையுடையவனாய்;    மாரன்   அனையான்   -   (அழகில்)
மன்மதனை  ஒப்பவனாய்;  மலர்கொய்து  இருந்தானை  - பூக்களைப்
பறித்துக் கொண்டிருந்த (தன்) கணவனை; கார் அன்ன கூந்தல் - கார்
மேகம்  போன்ற  கூந்தலையுடையவளாய்;  ஓர்  குயில் அன்னவள் -
(குரலில்) ஒப்பற்ற குயிலைப்  போன்றவளான  ஒருத்தி; வந்து - (அவன்
அருகில்)    வந்து;   கண்   புதைப்ப   -   (அவன்)   கண்களைப்
பொத்தினாளாக;  ஆர்  என்னலோடும்  -  (அப்போது அவன்) (என்
கண்களைப் பொத்தியவர்) யார்? என்று கேட்டவுடனே;  அனல் என்ன
-  (அவள்) தீ போன்று வெதும்பி; அயிர்த்து உயிர்த்தாள் - ஐயமுற்று
(வெப்பப்பெரு) மூச்சு விட்டாள். 

தான்     கண்ணைப்  பொத்தியவுடன்.  தன்  பெயரைச்  சொல்லிக்
‘கையை  எடு’  என்று சொல்ல வேண்டிய தன் கணவன். ‘ஆர்’  என்று
வினவியதால்  தன்னைப் போன்றே இவன் கண்  பொத்தி  விளையாடும்
மகளிர்.  வேறு சிலரும் உள்ளார்கள் போலும்  என்ற  ஐயத்தால் இவள்
ஊடல்  கொண்டாள்  என்றபடி.  போர் என்று  சொன்னவுடன்  உடம்பு
பூரித்து.  தோள்  பெருக்கும்  வீரமரபினைக்   குறித்தவாறு.  “கிட்டியது
அமர்  எனக்  கிளருந்  தோளினான்”  (கம்ப.  2311)  எனக்  குகனைப்
பின்பு  குறிப்பார்  “போர்  எனிற்  புகலும்  புனைகழல்  மறவர்” (புறம்.
31.9)  என்பதும்  காண்க.  மகளிர்   தலைவர்   கண்களைப் புதைத்தல்
வழக்கம்  என்பது:  “நலம் பெறு கையின் என்  கண்  புதைத்தாயே!.......
நீயலது  உளரோ  என்  நெஞ்சு   அமர்ந்தோரே!”   (ஐங்.  293. 2. 5)
அக்கால் ஆடவர் வீரமும் ஈரமும் ஒருசேர இப்பாடலில் குறித்தார்.   18