பூக் கொய் படலம் - 990
ஒரு பெண் குயிலிடம் மலர் வேண்டுதல்
மகளிரிடையே புலவிக் காட்சிகள்
990.
மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற
வந்து தோன்ற.
நெய் தாவும் வேலானொடு. நெஞ்சு
புலந்து நின்றாள்.
எய்தாது நின்றம் மலர் நோக்கி.
‘எனக்கு இது ஈண்டக்
கொய்து ஈதி’ என்று. ஓர் குயிலை. கரம்
கூப்பு கின்றாள்.
நெய்தாவும் வேலானொடு - நெய்பூசப் பெற்ற வேலேந்திய (தன்)
கணவனோடு; நெஞ்சு புலந்து நின்றாள் - (மனத்திற்) பிணக்கம்
கொண்டிருந்த ஒருத்தி; மைதாழ் கருங்கண்கள் - அஞ்சன மை
தங்கிய கரிய கண்களில்; சிவப்பு உற வந்து தோன்ற - செந்நிறம் மிக
வந்து தோன்றச் (சினந்து); எய்தாது நின்ற மலர்நோக்கி -
(தனக்கு) எட்டாமல் இருந்த மலரைப் பார்த்து; இது எனக்கு
ஈண்டக் கொய்து ஈதி - ‘இந்த மலர் எனக்குக் கிடைக்க அதனைக்
கொய்து கொடு’ என்று; ஓர் குயிலைக் கரம் கூப்புகின்றாள் -
(ஊடலால் கணவனை வேண்டாது) ஒரு குயிலை நோக்கிக் கை
கூப்பினாள்.
கணவனைக் கை கூப்புவதற்கு மாறாக. ஊடலால். குயிலைக் கரங்
கூப்பினாள் குயிலைக் “கொய்து ஈதி” என வேண்டியது. “அஃறிணை
மருங்கினும் அறையப்படுமே” (தொல்.) எனும் அகப்பொருள் விதியை
உட்கொண்டது. நெய் தாவும் வேலான் அவன். மை தாங்கும் வேலாள்
இவள். இருவர்க்கும் இடையே நடக்கும் ஊடற் போரில். நெய் தாவும்
வேல் தோற்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்த. “கண்கள் சிவப்பு
உற (மிக) வந்து தோன்ற” என்றார். “நான் வேண்டியது ஈவார் இங்கு
யாரும் இல்லை; நீயாவது பறித்துத் தா!” என அவன் அருகிருக்கவும்
ஊடலால் கூறினாள். ஒரு குயிலை. ஒரு குயில் கரங்கூப்பி நின்றது
எனும் ஒரு நயமும் தோன்றும். நின்றம் மலர் - செய்யுளாதலின்
இசைக்காக மகரம் விரிந்தது. சிவப்பு வெகுளி. “கறுப்பும் சிவப்பும்
வெகுளிப் பொருள்” (தொல். உரி. 76). 16
