பூக் கொய் படலம் - 989
மனைவி காணாவாறு ஒரு மன்னன் மறைதல்
கணவன் மறைவிடம் நிற்க மனைவி மறுகுதல்
989.
மயில் போல் வருவாள் மனம் காணிய.
காதல் மன்னன்.
செயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச்
சூழல் சேர.
பயில்வாள். இறை பண்டு பிரிந்து
அறியாள். பதைத்தாள்;
உயிர் நாடி ஒல்கும் உடல்போல்
அலமந்து உழந்தாள்.
காதல் மன்னன் - (தன் துணைவியிடத்து) பேரன்பு கொண்ட
மன்னன் ஒருவன்; மயில் போல் வருவாள் - மயில் போன்ற
அழகோடு வருகின்ற தன் மனைவியின்; மனம் காணிய - மன
நிலையை ஆராய்ந்தறிவதற்காக வேண்டி; செயிர்தீர் மலர்க்காவின் -
குற்றமற்ற அப்பூஞ்சோலையில் (உள்ள); ஒர் மாதவிச் சூழல் சேர -
ஒரு குருக்கத்திப் புதரில் ஒளிந்து கொள்ள; பயில்வாள் - தன்
துணைவனோடு இடையறாது பழகுபவளும்; பண்டு இறை பிரிந்து
அறியாள் - (இதற்கு) முன்பு. கணவனைச் சிறிதும் பிரிந்தறியாதவளும்
ஆகிய அம் மாது; உயிர் நாடி ஒல்கும் உடல்போல் - உயிரைத் தேடி
உலையும் உடலைப் போல; பதைத்தாள் அலமந்து உழன்றாள் -
துண்டித்து சுற்றிச் சுழன்று (தேடி) திரிவாள் ஆனாள்.
தன்னைப் பிரிந்தால் தன் தலைவி எவ்வாறு துயர் உறுவாள் என
அறிய நினைத்து. விளையாட்டாக ஒரு பூம்புதருக்குள் ஒரு மன்னன்
ஒளிந்தானாக ஒருபோதும். தன் கணவனைப் பிரிந்தறியாத அம்
மங்கை. உயிரைத் தேடி உடல் ஒன்று அலைந்து தவிப்பதைப் போலத்
தேடித் தவித்தாள் என்பதாம்.
உடல் தலைவிக்கும். உயிர் தலைவனுக்கும். உவமைகள்.
“உடம்பொடு உயிரிடை என்ன. மற்று அன்ன மடந்தையொடு
எம்மிடை நட்பு” (திருக். 1122) என வள்ளுவனாரும் தலைவியை
உடலாகவும் தலைவனை உயிராகவும் கூறியுள்ளமை காண்க.
உடலும் உயிரும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக்
கலந்துவருதலும். இன்பதுன்பங்களை ஒருசேர. அனுபவித்தலும்.
ஒன்றையொன்று இன்றியமையாமையும் (பரிமே. 1122. வரை) பொருந்தி
வருதலால். இத்தன்மைகளேயுடைய கணவன் மனைவியர்க்குப்
பொருந்தும் உவமையாயின. பின். சீதையினை இராவணன் கவர்ந்து
சென்றுவிட்ட காலை. இராமன் வந்து சீதையைக் காணாது தவித்தற்கு
இவ்வாறே உயிரையும் உடலையும் உவமை கூறுவார். “கூடு
தன்னுடையது பிரிந்து ஆர்உயிர். குறியா நேடிவந்து அது கண்டிலதாம்
என நின்றான்” (கம்ப. 3473).
மனங்காணிய - மனத்தைக் காண்பதற்காக. காணிய - செய்யிய
என்னும் வினையெச்சம். காரணப்பொருட்டு. செயிர்தீர்
மலர்க்கா - குற்றமற்ற பூங்கா. செயிர் - குற்றம். பூங்காவுக்குக் குற்றம்
இல்லாமையாவது; எப்போதும் வாட்டமின்மையும். கண்ணுக்கும்
கருத்துக்கும் இதம் அளிப்பதுமாம்.
மாதவி - குருக்கத்தி. சூழல் - புதர். கொடிவீடு. வடமொழியில்
லதாக்கிருகம். இறை - சிறிது; தலைவன் - இரட்டுறமொழிதல்.
உடலைத் தேடி உயிர் இயங்குமேயன்றி. உயிரைத் தேடி உடல்
இயங்காது ஆதலால் இல்பொருள் உவமையணி.
அலமரல் - சுழல்தல் - “அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி”
(தொல்: உரி: 14). 15
