பூக் கொய் படலம் - 1003
அன்னத்திற்கு ஆடை அளித்தல்
1003.
தன்னைக் கண்டாள்; மென் நடை
கண்டாள்; தமரேபோல்
துன்னக் கண்டாள்; தோழமை கொணடாள்;
துணை என்றாள்;
‘உன்னைக் கண்டார் எள்ளுவர்; பொல்லாது;
உடு நீ’ என்று.
அன்னக் கன்னிக்கு. ஆடை
அளிப்பான் அமைவாளும்;
மெல் நடை கண்டாள் - (அன்னத்தின்) மெல்லிய நடையினைக்
கண்டாள் ஒருத்தி; தன்னைக் கண்டாள் - அந்நடையில் தன்னையே
கண்டாளாய்; தமரே போல் - சுற்றத்தாரையே போல; துன்னக்
கண்டாள் - (இவள் நடை கற்க) அவ்வன்னம் நெருங்கி நெருங்கி
வருவதைக் காண்பவளாய்; தோழமை கொண்டாள் - அதனோடு
தோழமை கொண்டவளாய்; துணை என்றாள் - நீ என் (அருந்)
துணையாவாய் என்று சொல்லியவளாய்; உன்னைக் காண்பார்
எள்ளுவர் - (அவ்வன்னத்தை நோக்கி) நீ ஆடையின்றி இருப்பதைக்
கண்டவர்கள் உன்னைப் பழிப்பார்கள்; பொல்லாது -
(அப்படியிருப்பது) தவறு; உடு நீ - நீ (இந்த ஆடையை) உடுத்துக்
கொள் என்று; அன்னக் கன்னிக்கு - இளமைமிக்க அன்னப்
பெடைக்கு; ஆடை அளிப்பான் - (தன்) ஆடையைக் கொடுக்க;
அமைவாளும் - உடன்படு வாளும்.
அன்ன நடையில் தன் நடையைக் கண்டாள் ஆதலின்.
“மென்னடை கண்டாள் ஆதலின். “மென்நடை கண்டாள் தன்னைக்
கண்டாள்” என்றார். சுற்றி நெருங்கியிருப்பவர்கள் சுற்றத்தார் ஆதலின்
“தமரே போல் துன்னக் கண்டாள்” என்றார். குருதித் தொடர்பு
இன்மையின் “தோழமை கொண்டாள்” என்றார். கன்னியொருத்தி.
ஆடைக்குறையோடிருப்பது ப ழிப்புக்கும் தீமைக்கும் ஏதுவாம்
ஆதலின். “அன்னக்கன்னிக்கு கண்டார் எள்ளுவர்; பொல்லாது உடு
நீ” என்று ஆடை அளித்தாள். கவரும் பருவத்தில். பெண்டிர் உடல்
மூடி ஆடை அணிதலின் இன்றியமையாமையை அன்னத்தின் மேல்
வைத்து அறிவித்தவாறாம். பெண்மையின் இரக்கப்பண்பும் உணர்ச்சி
ஒட்பமும் ஒழுங்கு சுட்டியவாறு. ஆடை அளிப்பான்:
ஆடையளிப்பதற்காக - பான் ஈற்று வினை எச்சம்.
காரணப்பொருட்டு. 29
