பூக் கொய் படலம் - 1004

bookmark

ஒரு பெண், மயிலுக்கு அஞ்சியும் நாணியும் மறைதல்

1004.

பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்தன்
   படர் அல்குல்
ஆகக் கண்டு. ஓர் ஆடு அரவு ஆம் என்று.
   அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி. கொம்பின் ஒதுங்கி.
   துணர் ஈன்ற
சாகைத் தம் கை. கண்கள் புதைத்துத்
   தளர்வாளும்;
 
பாகு     ஒக்கும்  சொல்  -  தீம்  பாகினைப்  போனற  இனிய
சொல்லுடைய;   நுண்    கலையாள்    -   மெல்லிய   ஆடையை
அணிந்தவளாகிய  ஒருத்தி;  தன்  படர்  அல்குல்  -  தனது  பரந்த
அரையிடத்தை;   ஆகக்   கண்டு   -   கண்கூடாகக்   கண்டு;  ஓர்
ஆடுஅரவாம் - (இது) படம்  எடுத்து ஆடுகின்ற ஒரு பாம்பை ஒக்கும்;
என்று  -  என்று  எண்ணி;  அயல் நண்ணும் - அருகே நெருங்கும்;
தோகைக்கு  அஞ்சி  -  (பாம்பின்  பகையான)  மயிலுக்குப்  பயந்து;
கொம்பின்  ஒதுங்கி  - பூங்கொம்பு ஒன்றிலே பதுங்கி; துணர்ஈன்ற -
பூங்கொத்துக்களையுடைய;  சாகைத்  தம்  கை - பூங்கிளை ஒன்றைத்
தன் கைகளால் எடுத்து; கண்கள் புதைத்து - (நாணத்தால்) கண்களைப்
பொத்திக் கொண்டு; தளர் வாளும் - தளர்வுறுவாளும். 

ஒரு    பூங்கொடியில் தன்னை மறைத்துக் கொள்ளுமாறு மென்மைத்
தோற்றம் உடையாள் என்பார் “கொம்பின்  ஒதுங்கி” என்றார்.  இதனால்
இவள்   உருவம்  பூங்கொடியினும்   மெல்லியது   என்றவாறு.   இவள்
விழிகள்  பூக்களைப்  போன்றவையாதலால்  வேற்றுமை  தெரியாதிருக்க
பூக்களைக்  கைகளால் அள்ளிப் பொத்திக் கொண்டாள் -  மயில்.  இது
பூங்கொடியே என்று ஏமாந்து போக வாய்ப்பாகுமாறு.              30