பிருகு மரீசி வம்ச வரலாறு
பிருகு மரீசி வம்ச வரலாறு என் குருநாதராகிய பராசர முனிவரே! உங்களின் அனுகிரகத்தால், ஆசீர்வாதத்தால் ஜெகன் மாதாவாக இருக்கக்கூடிய ஸ்ரீ விஷ்ணு பெருமானின் திருமார்பில் எழுந்தருளி அருள்பாவித்து கொண்டு இருக்கக்கூடிய திருமகளான மகாலட்சுமியின் திரு அவதார வைபவத்தை பற்றி அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி குருநாதரே! குரு நாதரே! எனக்கு மேலும் சில ஐயங்கள் என்னுடைய மனதில் இருக்கின்றன. அதையும் தாங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று அடியேன் வேண்டுகிறேன் என்று கூறினார் மைத்ரேய முனிவர். பராசர முனிவரும், மைத்ரேயரின் விருப்பங்களை அறிந்து, சிஷ்யனே! எந்த ஒரு காரியங்களையும் செய்கின்ற பொழுது அந்த காரியம் தொடர்பான ஐயங்கள் இருக்கும் பட்சத்தில் எப்பொழுதும் அந்த செயலை செய்தல் ஆகாது. ஒரு செயலை செய்யும் பொழுது அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொண்டு செய்தால் தானே அந்த செயல் உடைய முழு பலன்களையும் நம்மால் அனுபவிக்க இயலும். ஒரு குருவின் கடமை என்பது தனது மாணவர்களிடம் இருக்கக்கூடிய ஐயங்கள் யாவற்றையும் விளக்கி அவர்களை மென்மேலும் சிறந்தவர்களாகவும், நல்வழிப்படுத்துவதும், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க செய்வதாகும். ஆகவே, மைத்ரேயா! உமது மனதில் இருக்கக்கூடிய ஐயங்களை எம்மிடம் கேட்பாயாக என்று கூறினார். மைத்ரேய முனிவரும் தனது குருநாதராக இருக்கக்கூடிய பராசர முனிவரை வணங்கிய வண்ணமாக குருநாதரே! இந்த உலகத்தில் பிருகு மரீசி முதலிய முனிவர்களின் வம்ச வரலாற்றை தாங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன் என்று கூறினார். பிரம்மதேவரால் உலகம் படைக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டவை பிருகு முனிவர் ஆவார். பிருகு என்ற சொல்லுக்கு கடுமையான தவ சக்திகள் மூலமாக பாவங்களை அளிக்கக்கூடியவர் என்று பொருளாகும். பிருகு முனிவர், கியாதி என்ற பத்தினிடத்தில் மகாலட்சுமியையும் தாதா, விதாதா என்ற இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்கள். தாதாவும், விதாதாவும், மேருவின் புத்திரர்களான ஆயதி மற்றும் நியதி என்னும் கன்னியர்களை முறைப்படி பெரியவர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார்கள்.இவர்கள் இருவரில் தாதாவுக்கு பிராணன் என்கின்ற மகன் பிறந்தான். பிராணனுக்கு, துதிமான் என்னும் மகன் பிறந்தான். துதிமானுக்கு அசவான் என்கின்ற குமாரன் பிறந்தான். விதாதாவுக்கு, மிருகண்டு என்ற புத்திரன் பிறந்தான். அந்த மிருகண்டுக்கு மார்க்கண்டேயன் பிறந்தான். மார்க்கண்டேயனுக்கு வேதசிரன் என்கின்ற மகன் பிறந்தான். அவர்களாலேயே பிருகு வம்சமானது இந்த உலகம் முழுவதும் பரவியிருந்தது. மரீசி மாமுனிவருக்கு சம்பூதி என்கின்ற மனைவியிடத்தில் பௌர்ணமாசன் என்கின்ற புத்திரன் பிறந்தான். அவனுக்கு விரசன் பர்வதன் என்னும் இரு குழந்தைகள் பிறந்தார்கள்.ஆங்கிரத முனுக்கு, ஸ்ரீமாருதி என்ற பத்தினியிடத்தில் சினீவாலி, குரு, ராவை, அனுமதி என்று சொல்லப்பட்ட நான்கு பெண்களை பெற்றெடுத்தாள்.அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயை என்பவள் சந்திரனையும், துர்வாசரையும், தத்தாத்திரேயர் என்ற மகாயோகியையும் பெற்று எடுத்தார்கள். அவன் பூர்வ ஜென்மத்தில் சுவாயம்புவ மநுவந்திரத்திலே அகஸ்தியனாக இருந்தான். புலஹன் என்ற முனிவருக்கும், க்ஷமைக்கும் கர்த்தமன், அர்வரீவான், சகிஷ்ணு என்ற மூன்று பிள்ளைகள் தோன்றினார்கள். கிரது என்னும் மாமுனிவருக்கு சன்னதி என்பவளிடத்தில், ஊர்த்துவரேதஸரும், கட்டை விரற் பரிமாணமுள்ளவரும் சூரியப்பிரகாசிகளுமான வாலக்கில்யர் என்ற அறுபதினாயிரம் முனிவர்கள் உண்டானார்கள். வசிஷ்டருக்கு, ஊர்ச்சை என்ற பெண்ணிடம் ரசனும், காத்திரனும், ஊர்த்தபாகுவும், சவனனும், அனகனும், சுதபனும், சுக்கிரனும் ஆகிய சப்த மாமுனிவர்கள் பிறந்தார்கள். பிரம்மதேவனுக்கு மூத்த மகனான அக்னி என்பவனுக்கு சுவாஹா என்ற பத்தினியிடம் பாகவன், பவமானன், சுசி என்னும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களது சந்ததியில் நாற்பத்தைந்து பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்களும், இவர்களுடைய தகப்பன்மார்கள் மூன்று பேரும் கூடஸ்தனான அக்னியபிமானி தேவதையும் ஆக நாற்பத்தொன்பது பேர்களும் அக்னிகள் என்று வழங்கப்படுகிறார்கள். மைத்ரேயரே! சதுர்முகப் பிரம்மன் சிருஷ்டித்த அக்னிஷ்வாத்தர் என்றும், பர்ஹீஷதர் என்றும் சொல்லப்பட்டு யாகம் செய்தவர்களும், யாகம் செய்பவர்களுமான பிதுர்க்கணங்களை சேர்ந்து ஸ்வதை என்னும் பெண்மணியானவள் மேனை, வைதரணி என்கிற இரு பெண்களை பெற்றாள். அவ்விருவரும் யோக பயிற்சியில் சிறந்து பிரமவாதிகளாய் திகழ்ந்தார்கள். இவ்விதமாக விருத்தியான தக்ஷ புத்திரிகளுடைய சந்தானக்கிரமம் பற்றிய அனைத்து விவரங்களையும் பராசரர் முனிவர் தன்னுடைய சீடரான மைத்ரேயருக்கு கூறினார். மேலும் இதை முழுமனதோடு நம்பிக்கையுடனும் படிக்கின்ற எந்த மனிதனும் சந்தானமில்லதாவனாக இருக்கமாட்டான் என்று கூறினார்.
