பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி

bookmark

(1)    களப்பிரர் ஆட்சி

வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் கி.பி. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும், சேர, சோழ, பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர். களப்பிரர்களைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 350 - 550 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.

எனினும் களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்ட போது அவர்களை எதிர்க்க முடியாமல் இலங்கைக்குச் சென்று அங்கு ஒரு ஆட்சியை பாண்டியர்கள் ஸ்தாபித்த வரலாறும் உண்டு. அவ்வாறு களப்பிரர்கள் அரசர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் இருந்த போது பாண்டியர் மரபிலிருந்து இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டிய வேந்தர்களை "இராசரட்டைப் பாண்டியர்கள்" என்று அழைத்தனர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான சூல வம்சம் குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய பாண்டு என்னும் பாண்டிய மன்னன் அதற்கு முன் அநுராதபுரத்தை ஆண்ட மித்தசேனன் என்னும் மன்னனை தோற்கடித்து அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இராசராட்டிர ஆட்சியை தொடங்கி வைத்தான். இவனுக்குப் பிறகு ஐந்து பாண்டியர்கள் வட இலங்கையை ஆண்டார்கள். தாதுசேனன் என்ற இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவன் ஆறு இராசராட்டிர பாண்டியர் மன்னர் ஆட்சியிலும் இராசராட்டிரம் மீது படையெடுத்தான். அனைத்து படையெடுப்பிலும் பாண்டிய மன்னர்களுக்கே வெற்றி கிட்டினாலும் திரிதரன் மற்றும் தாட்டியன் போன்ற இராசராட்டிரப் பாண்டியர்கள் இவனால் கொல்லப்பட்டனர். முடிவாக ஆறாம் இராசராட்டிரப் பாண்டிய மன்னனான பிட்டியன் ஆட்சியில் அவனைக்கொன்று இலங்கையைக் கைப்பற்றினான். அதிலிருந்து இராசராடிரப் பாண்டியர் ஆட்சி முடிவு பெற்றது.

ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது. இன்றைய தமிழகத்திலும் கூடப் பரவியது. பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது. இனி இலங்கையை ஆண்ட இந்த இராசராட்டிரப் பாண்டியர்களைப் பற்றிக் காண்போம்.

பாண்டு (பாண்டியன்)

பாண்டு (பொ.பி. 436 - 441) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் முதலாமானவன். களப்பிரர் காலத்தில் தமிழகத்திலிருந்து தன் இரண்டு மகன்களுடன் தப்பி வந்த இவன் அந்நாட்டை அரசாண்டு கொண்டிருந்த மித்தசேனன் என்பவனை தோற்கடித்து இராசராட்டிரப் பாண்டியர் அரசை நிறுவினான். இவனுக்கு பிறகு இவனது மகன்களான பரிந்தன் மற்றும் இளம் பரிந்தன் முறையே இராசராட்டிரம் அரசை ஆண்ட்னர். இவனது ஆட்சியில் இராசராட்டிரம் தெற்கே மகாவலி கங்கையாற்றையும் மற்ற மூன்று திசைகளிலும் கடலையும் எல்லையாகக் கொண்டமைந்தது. இதன் தலைநகரம் அநுராதபுரம் ஆகும். இவன் மகாவலி கங்கையாற்றின் வடபகுதியில் 28 பாதுகாப்பு எல்லைக் கோட்டைகளை கட்டினான்.

பரிந்தன்

பரிந்தன் (பொ.பி. 441 - 444) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் இரண்டாமானவன். இவன் பாண்டு (பொ.பி. 436 - 441) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் முதலமானவனின் மூத்த மகனாவான். இவனுக்குப் பிறகு இவனது தம்பியான இளம் பரிந்தன் (பொ.பி. 444 - 460) இராசராட்டிர அரசை ஆண்டான். இவனது வரலாறு அறியப்படவில்லை ஆயினும் இவன் ஆட்சியில் தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வந்தான் என அறிய முடிகிறது.

குட்ட பரிந்தன்

குட்ட பரிந்தன் அல்லது இளம் பரிந்தன் அல்லது புத்ததாசன் என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் மூன்றாமவனாவான். இவன் பரிந்தன் (பொ.பி. 441 - 444) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் இரண்டாமவனின் ஆட்சிக்குப் பிறகு ஆண்டவன். இவன் பரிந்தனின் தம்பியாதலால் இளம்பரிந்தன் என்று அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியில் தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வந்து தோல்வியுற்றான் என்பதை அனுராதபுரம் கல்வெட்டுக்கள் மூலமாக அறிய முடிகிறது.

அநுராதபுரம் நகரிலுள்ள இவனுடைய கல்வெட்டுகள் தற்போது அநுராதபுரத்து ஆர்க்கியாலஜி இலாகாவில் காணப்படுகின்றன. அக்கல்வெட்டின் படி இவன் புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் இவனுடைய மனைவி புத்த விகாரை ஒன்றுக்கு தானம் செய்ததையும் அறிய முடிகிறது.

திரிதரன்

திரிதரன் (பொ.பி. 460) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் நாலாமானவன். இவன் இளம் பரிந்தன் (பொ.பி. 444 - 460) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் மானவனின் ஆட்சிக்குப் பிறகு ஆண்டவன். இவன் ஆட்சியில் இரண்டாம் மாதத்தின் போது தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வெற்றி பெற்று திரிதரனையும் கொன்றான் என அறிய முடிகிறது. அதற்குப்பிறகு தாட்டியன் என்னும் இராசராட்டிரப் பாண்டியர் மன்னன் இராசராட்டிரம் அரசை ஆண்டான்.

தாட்டியன்

தாட்டியன் என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் ஐந்தாமானவன். இவன் திரிதரன் (பொ.பி. 460) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் நாலாமானவனின் ஆட்சிக்குப் பிறகு ஆண்டவன். இவன் ஆட்சியில் தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வந்து தோல்வியுற்றான். இவர்கள் இருவருக்கும் பல தடவை போர் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அனைத்திலும் பாண்டியனே வெற்றி பெற்றான். கடைசியாக இவர்கள் இருவருக்கும் நடந்த போரில் தாட்டிய பாண்டியன் இறந்து போனாலும் பாண்டியர் படையே வெற்றி பெற்றது. இவை யாவும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் செய்திகள் ஆகும்.

உரோகணம் நாட்டிலுள்ள கதிர்காமம் என்ற முருகன் படைவீட்டில் இவனுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதனால் இவனது ஆட்சியில் இராசராட்டிரம் அரசு இலங்கை முழுதும் பரவியிருந்ததை அறிய முடிகிறது. அக்கல்வெட்டின் படி இவன் புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் உரோகணம் நாட்டில் சில காலம் தங்கியிருந்தான் எனவும் தெரிகிறது.

பிட்டியன்

பிட்டியன் (பொ.பி. 463) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் ஆறாமானவன் (இறுதியானவனும் இவனே). இவன் திட்டியன் (பொ.பி. 460 - 463) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் ஐந்தமானவனின் ஆட்சிக்குப் பிறகு ஆண்டவன். இவன் ஆட்சியில் ஏழாம் மாதத்தின் போது தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வெற்றி பெற்று பிட்டியனையும் கொன்றான் என அறிய முடிகிறது. அதற்குப்பிறகு தாதுசேனன் வழி வந்தோரே இராசராட்டிரத்தை ஆண்டனர்.

(2)    சோழர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிய ராஜ்ஜியம்:

பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை திறை செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

(3)    மகமதியர் ஆட்சி

கில்ஜி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியன் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சயாவுடீன் பார்னி, அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான். மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான். 1320களில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றி 1378 ஆம் ஆண்டு வரை ஆண்டான். அவன் வழி வந்தவர்கள் நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்.

1330 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் மகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி துக்ளக்கின் அதிகாரியாகத் திகழ்ந்த 'ஜலாலுடீன் அசன்சா' மதுரையினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அடில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இபின்படூடா என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள்,கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு, விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர். என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகமதியர் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்:

மன்னன்    ஆட்சிக்காலம்

மாறவர்மன் குலசேகர பாண்டியன்    கி.பி. 1314-1346

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்    கி.பி. 1315-1347

மாறவர்மன் வீரபாண்டியன்    கி.பி. 1334-1380

மாறவர்மன் பரக்கிரம பாண்டியன்    கி.பி. 1335-1352

இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

(4)    ராயர்களின் ஆட்சி

பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள் (வாணாதிராயர்கள் என்பவர்கள் ஒரு வகை முரட்டு வம்சத்தினர்) பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்கு வாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது.

ஸ்ரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் என்றக் குறிப்பும் காணக் கிடைக்கிறது. பாண்டியர் வலிமை குன்றிய வேளை ராயர்கள் மதுரையினை ஆட்சி செய்துள்ளனர். புதுக்கோட்டை குடுமியான் மலைக் கல்வெட்டில் பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

(5)    விஜய நகரப் பேரரசாட்சி

கி.பி. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை விஜயநகரப் பேரரசு ஆண்டது. நாயக்க மன்னர்கள் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள்,மண்டபங்கள்,சிற்பக் கூடங்கள்,உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின. சேர, சோழ,பாண்டிய போன்ற பேரரசுகள் விஜய நகரப் பேரரசு காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்தன. பல பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்களாக இருந்து விஜய நகரப் பேரரசிடம் திறை செலுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்.

பரக்கிரம பாண்டியன் என்ற பெயரில் நாயக்கர் காலத்தில் மூன்று மன்னர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1. கி.பி. 1387 ஆம் ஆண்டளவில் பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தான்.

2. கி.பி. 1384-1415 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடைய ஒன்னொருவன்.

3. கி.பி. 1401-1434 வரை பராக்கிரம பாண்டியன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.

4. சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பெயர்கொண்ட ஒருவன் கி.பி. 1396 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றான் என கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

5. திருப்புத்தூரி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளின் படி கி.பி. 1401 முதல் 1422 வரை சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டினை ஆண்ட உதிரி அரசர்களாவர். இவர்கள் ஆட்சிக் காலத்து தலைநகரங்கள் மற்றும் இவர்கள் பணிகள் செய்த போர்கள் போன்றவற்றின் தகவல்கள் கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது.

பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள்:-

மானாபரணன், வீரகேரள பாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.