பாண்டியர் ஆட்சி இயல்

bookmark

நாட்டியல்

தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்; கிழக்கே கடல், வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்; தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன. இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர், கூற்றம், மண்டலம், நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.

குடும்பவியல்

அரசன், அரசி, இளவரசன், பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது. பாண்டிய அரசன், வேந்தன் எனப்பட்டான். பட்டத்தரசி, பாண்டிமாதேவி எனப்பட்டாள். சில பாண்டிய அரசர்கள், பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர். புராணங்களின் படி பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர். அரசனின் மூத்த மகனே இளவரசு பட்டம் பெற இயலும். இதனால், மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய பாண்டிய வேந்தர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தன் ஊழ்வினையால், கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான். அந்நேரம், இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன், மதுரைக்கு வந்து முடிசூடினான். ஐந்து பேர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது. ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி, தந்தை மகன் கருத்து வேறுபாடுகள் வந்தபோது, ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற ஒரு நிகழ்வு பிற்காலப் பாண்டியரின் வரலாற்றில் இருந்தது.

அரசியல் ஆட்சி இயல் :-

பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள். அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள், படைத் தலைவர்கள் இருந்தனர். அரையர், நாடுவகை செய்வோர். வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.

1. அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள். இவர்கள்,நாட்டைச் சுற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.

2. நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.

3. வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.

4. புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.

பாண்டிய வேந்தர்கள் அரசியல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டி பட்டங்களினையும் அளித்தனர்.

அரசின் வரி

பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர். இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது. குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர்.விளைநெல்,காசு, பொன் வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர்.பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும்.உல்குவின் பொருள் இதுவேயாகும்.

நில அளவியல்

ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது. பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது. நாடு வகை செய்வோர் அளந்தனர். நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல். குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது. நிலங்களை குழி, மா, வேலி என்று பெயரிட்டு அளந்தனர். அளந்த நிலத்திற்கு எல்லைக் கல் நாட்டனர். இக்கற்களே புள்ளடிக் கற்களாகும். சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது. திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது. நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது. நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.

இறையிலி

இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர். சைன, பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது. அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம்; பட்டவிருத்தி எனவும், மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்கு முற்றூட்டும்,சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.

அளவை இயல்

எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். பொன், வெள்ளி, கழஞ்சு, காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர், சர்க்கரை, காய்கறிகள், புளி ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால் நிறுத்தனர். சேர் ,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன. நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர், மிளகு, சீரகம், கடுகு ஆகியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி போன்ற முகறும் கருவிகளால் அளக்கப்பட்டன்.

பாண்டியர் காலத்து எடுத்தல் அளவை

10 கர்ணம் - 1 கழஞ்சு
100 பலம் - 1 துலாம்

முகத்தல் அளவை

5 செவிடு - ஒரு ஆழாக்கு
2 ஆழாக்கு - ஒரு உழக்கு
2 உழக்கு - ஒரு உரி
2 உரி - ஒரு நாழி
6 நாழி - ஒரு குறுணி
16 குறுணி - ஒரு கலம்

இவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன,சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இவ்வளவு முறை புழக்கத்தில் இருந்திருக்கின்றது. 14 ஆம் நூற்றாண்டு முதல் புதிய அளவு முறைகள் வந்தன குறிப்பிடத்தக்கது.

நாணய இயல்

பெருவழுதி நாணயம்:

பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன், செம்பால் செய்யப்பட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் முத்திரை காசுகள், கி.மு.3-2 ஆம் நூற்றாண்டென மதிக்கப்பெறும் பெருவழுதி நாணயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான். இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.

சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.

1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.

காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 ஆகும்.

ஊரவை:

பாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது. ஊராட்சியினை இது செயல்பட வைத்தது. குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர். சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர். நிலமும், கல்வியும், மனையும், அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடியும். ஊர்களுக்கு பொது மன்றங்கள் இருந்தன. அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது. நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன. வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன. அவை பின்வருமாறு:-

சம்வற் சரவாரியம் - நீதி வழங்கும்,அறநிலையங்களை கண்காணிக்கும்.

ஏரிசவாரியம் - நீர் நிலை,பாசனம் கண்காணிப்பது.

தோட்ட வாரியம் - நிலங்களை அளப்பது,கண் காணிப்பது.

பொன் வாரியம் - நாணயங்களை வெளியிடுவது,கொடுப்பது.

பஞ்சவாரியம் - குடிமக்களிடம் வரிபெற்று அரசுக்கு அளிக்கப்படுவது.

அவை உறுப்பினர் பெருமக்கள், ஆளுங்கணக்கர் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் ஓராண்டு ஊதியமின்றி பணிபுரிவர். ஊர் மன்றங்களிலும்,கோயில் மண்டபங்களிலும் ஊரவை கூடும். புதிய விதிகளை அமைக்கும் உரிமை ஊரவைக்கு இருந்தது. இவ்வாறாகப் பாண்டியர்களின் ஆட்சிமுறை நல்ல விதத்தில் செயல்படுத்தப்பட்டது.