பரசுராமப் படலம் - 1374
1374.
‘ஒரு கால் வரு கதிர் ஆம் என
ஒளி கால்வன. உலையா
வரு கார் தவழ் வட மேருவின்
வலி சால்வன. வையம்
அருகா வினை புரிவான் உளன்:
அவனால் அமைவனதாம்
இரு கார்முகம் உள; யாவையும்
ஏலாதன. மேல் நாள்;
ஒருகால் வரு கதிராம்- ஒற்றைச் சக்கரத்தினையுடைய தேரின் மீது
வருகிற சூரியன்; என ஒளிகால்வன - என்னுமாறு ஒளி விடுவனவும்;
உலையா - (எளிதில்) அழிக்கப்படாதனவும்; வருகார் தவழ்
வடமேருவின் வலி சால்வன - வானில் தவழும் மேகம் உலாவும்
வடமேரு மலையினது வலிமை பொருந்தியனவும்; வையம் அருகா
வினை புரிவான் உளன் அவனால் அமைவனதாம் - நிலவுலகத்தார்
நெருங்குதற்கும் இயலாத (தெய்வத் தன்மையுள்ள) சிற்பத் தொழிலைப்
புரிபவனான விசுவ கர்மாவினால் (வடிவு) அமைக்கப்பட்டனவும்;
யாவையும் ஏலாதன - எவற்றையும் தமக்கு உவமையாக
ஏற்காதவையுமாகிய; இருகார் முகம் -இரண்டு விற்கள்; மேல்நாள் உள
- முற்காலத்தில் இருந்தன.
“ஒருகால் வரு கதிர்” என்பதில் கால் என்பது சினையாகுபெயராய்.
ஒரு காலையுடைய சூரியன் தேரினைக் குறித்தது. வையம் - இடவாகு
பெயராய் வையத்து மக்களைக் குறித்து நின்றது. “அவன் திறமைக்குப்
பக்கத்தில் யாரும் செல்ல முடியாது” எனும் வழக்கையும்கொண்டு.
“வையம் அருகா வினைபுரிவான்” என்று விற்களையுருவாக்கிய
விசுவகர்மனைப் புகழ்ந்தார்.
இது முதல் ஆறு கவிகள் - சிவதனுசின் வரலாறு. 26
