பரசுராமப் படலம் - 1375
அறுசீர் ஆசிரிய விருத்தம்
1375.
‘ஒன்றினை உமையாள் கேள்வன்
உவந்தனன்; மற்றை ஒன்றை
நின்று உலகு அளந்த நேமி
நெடிய மால் நெறியின் கொண்டான்;
என்று இது உணர்ந்த விண்ணோர்.
“இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது?” என்று
விரிஞ்சனை வினவ. அந் நாள்.
ஒன்றினை - (அவ்விரண்டு விற்களுள்) ஒரு வில்லை; உமையாள்
கேள்வன் - உமையம்மையின் கொழுநனான சிவபெருமான்;
உவந்தனன் - விரும்பியெடுத்துக் கொண்டான்; மற்றையொன்றை -
மற்றொரு வில்லை; நின்று உலகு அளந்த நேமி நெடியமால் -
(திரிவிக்கிரமனாய்) உயர்ந்து நின்று. உலகங்களைத் (திருவடியால்)
அளவி்ட்ட சக்கரப் படையினை ஏந்திய நெடியோனாகிய திருமால்;
நெறியின் கொண்டான் - முறைப்படி தன் கைகளில் கொண்டான்;
என்று இது உணர்ந்த - என்ற இச்செய்தியை யறிந்த; விண்ணோர் -
தேவர்கள்; “இரண்டினும் வன்மை எய்தும் வென்றியது எது” -
“இவ்விரண்டு விற்களுள்ளும் வலிமை பொருந்திய வெற்றி தரும் வில்
எது?”; என்று விரிஞ்சனை வினவ; அந்நாளில் - என்று பிரமனைக்
கேட்ட அந்த நாளில் (அவன். “அமர் மூட்டிவிட்டான்” எனும் மேற்
கவியோடு முடியும்).
இடப்பாகமாக உமையம்மையை ஏற்றுள்ள திறம் நோக்கி.
“உமையாள் கேள்வன்” எனச் சிவபெருமானைச் சிறப்பித்தார். “ஓங்கி
உலகளந்த உத்தமன்” (திருப்பா. 3) ஆன சிறப்புப் பற்றி “நின்று
உலகு அளந்த நேமி நெடியமால்” என்று திருமாலைச் சிறப்பித்தார்.
விரிஞ்சன்: நான்முகன். 27
