பத்தாம் அத்யாயம்

பத்தாம் அத்யாயம்

bookmark


(சொத்துரிமைச் சட்டங்கள்  பொதுவானவை, அசையாச்  சொத்துக்கள், எல்லைத் தகராறுகளும்  அதனைத் தீர்க்கும் வழிமுறைகளும், வயல், மேய்ச்சல் நிலத்தை கையாளும் முறைகள், விற்பனை சம்மந்தமான விஷயங்கள், வரிவிதிப்பு, மறு விற்பனை, அத்துமீறல், இழந்த அல்லது திருடப்பட்ட சொத்துக்களைக் கையாளும் முறை, கண்டெடுக்கும் புதையலை கையாளும் வழிமுறைகள் )

சொத்துரிமைச் சட்டங்கள்  பொதுவானவை

மரபு  வழிச் சொத்துக்களின் பங்கீடு அப்பகுதியில் உள்ள  சாதி, கிராமப்பழக்க வழக்கங்களைப் பொருத்ததாகும். தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மகன்கள் மூதாதையர் சொத்துக்கு உரிமை கொண்டாட இயலாது.  ( தந்தை  தன் வாழ்நாளிலேயே  மூதாதையர் சொத்துக்களை மகன்களுக்குப் பங்கிட்டு அளிக்கலாம். அவ்வாறு செய்கையில் அவர் ஒருவருக்குத் தனிச் சலுகை காட்டுவதோ, சரியான உரிமை உடையவரைக் காரணமின்றி தவிர்த்தலோ கூடாது.) 

தந்தை உயிருடன்  இருக்கும்  போது மூதாதையர்களின் சொத்து பங்கிடப்படவில்லை எனில் , அவருடைய இறப்பிற்குப்   பின் சொத்துக்கள் பங்கிடப்படலாம். சுயமாய் ஈட்டிய  சொத்துக்களுக்கு மரபு வழிச் சட்டங்கள் பொருந்தாது. மூதாதையரின் சொத்துக்கள் எதுவுமற்ற நிலையில்  தந்தையின் மறைவிக்குப் பின் மூத்த மகனே கெட்ட ( தீய ) நடத்தையுடயவரைத்  தவிர இதர தம்பிகளுக்கு ஆதரவு அளிப்பான்.  ஏனெனில்,  எதுவுமற்ற நிலையில் பொறுப்புகளே சொத்துக்களாய் பிரித்துக் கொள்ளப் பட வேண்டியது. 

வயது வந்தவர்கள் மட்டுமே சொத்துக்களில் பங்கு பெறுவார். சிறியவர்களின் பங்கு தாயின் உறவினர்கள் அல்லது கிராமத்துப் பெரியவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். மணமாகாத சகோதரர்களுக்கு அவரது  பங்கோடு  பிற சகோதரர்களின் திருமணத்துக்குச் செலவழிக்கப்பட்ட தொகையும் அளிக்கப்படும். சகோதரிகளின் திருமண ஏற்பாடுகளுக்கான செலவுகளும் அளிக்கப்படும்.

சொத்துரிமையில் சொந்தம் பாராட்டுதல்:
ஒரு கட்டடத்தை அலட்சியமாய் கவனிக்காமல் , 20 வருடம்  வரை அங்கு  வாழாத ஒருவர் அதன் உரிமையாளர் என்னும் தகுதியை இழப்பார். ஓரிடத்தில் குடிபுகும் உறவினர், பிராமணர், துறவி அல்லது அரசனின் பிரதிநிதி அவ்விடத்தின் உரிமையைப் பெற இயலாது . அதே சட்டம் , வைப்பு நிதி , அடமானப் பொருள், பெண், எல்லைகள், மாநிலத்தின் சொத்துக்கள் அல்லது வேதங்களைக் கற்றறிந்த பிராமணர்களின் சொத்துக்களுக்கும் பொருந்தும்.

அசையாச்  சொத்துக்கள்:  
வீடுகள், வயல்கள், அணைகள் , நீர் நிலைகள் போன்றவை அசையாச் சொத்துக்களின் வகையாகும். அசையாச் சொத்துக்களின் மீதான தகராறுகள் அப்பகுதியில் வாழும் மக்களின் சாட்சியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். வரி செலுத்தும் ஒருவர், தன்  சொத்தை வரி செலுத்தும் மற்றவருக்கு விற்கவோ, அடகு வைக்கவோ இயலும்.              

பிராமணர்கள் பரிசாய் பெற்ற நிலங்களை அதே வகை நிலங்கள் உடையவருக்கே விற்க இயலும். வரி செலுத்துபவர் வரி விலக்கு பெற்ற மாநிலத்தில் வசிக்க இயலாது.( அவ்வாறு செய்தல் தனடனைக்கு உரிய குற்றமாகும்.) வரி செலுத்தும் ஒருவர் தாம் வரி செலுத்தும் எந்த ஒரு கிராமத்திலும் குடிபுகுந்து,  வீடு தவிர இதர சொத்துக்களை வாங்கலாம் . வீடு வாங்க முன் அனுமதி பெற வேண்டும். வரி செலுத்தாதவர் வரி விலக்கு பெற்ற கிராமத்தில் வசிக்காவிடினும் சொத்தின் மீதான உரிமையை தொடர்ந்து அனுபவிக்கலாம்.

எல்லைத் தகராறுகளும்  அதனைத் தீர்க்கும் வழிமுறைகளும்:
இரு கிராமங்களுக்கு இடையே யான எல்லைத் தகராறுகள் அண்டையில்  உள்ள  ஐந்து அல்லது பத்து கிராமங்களில் குழுவினர் மூலமும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லைக் குறியீடுகள் மூலமும் தீர்க்கப்படலாம். வழக்கு தொடுப்பவரைச் சாராதவர் அல்லது அவ்வூரில் சொத்துடைய வெளிப்புறத்தவர் இவர்களில் எவரேனும் தகாறுக் குறிய எல்லையைப்பற்றி  முதலில் விளக்கலாம். பிறகு சாட்சியாளர்கள் தீர்ப்புக் குழுவை அவ்வெல்லைப்  பகுதிக்கு  வழி நடத்திச் செல்லலாம். எல்லை விரிவாக்கப்பட்டது போன்று இல்லாதபட்சத்தில் சாட்சியாளர்கள் கடுமையாய் தண்டிக்கப்படுவர். அடையாளங்கள் அகற்றப்பட்டு  இருக்கும் எனில் அவ்வாறு செய்தவர் தண்டிக்கப்படுவார். அடையாளங்கள் எதுவும் இல்லாதிருப்பின் அந்த நிலம் இருதரப்பாருக்கும் நேர்மையான முறையில் பகிர்ந்து அளிக்கப்படும்.

வயல், மேய்ச்சல் நிலத்தை கையாளும் முறைகள்:
வயல்கள், ஆசிரமங்கள் , மேய்ச்சல் நிலங்கள் , இடுகாடுகள் , கோயில்கள் , பலி பீடங்கள் ஆகியவை சம்மந்தமான அனைத்து தகராறுகளுக்கும் பின்வருவன பொருந்தும். சரியான காரணமின்றி எவரும் மற்றவரின் சொத்தை ஆக்கிரமிக்க இயலாது. ஆக்கிரமிப்பாளர் தமது கூலி மற்றும் தம்மால்  ஏற்பட்ட இலாபத்தை எடுத்துக் கொண்டு மீதியை சொத்தின் சொந்தக்காரருக்கு அளிக்க வேண்டும். 

அது  போல, அசையாச் சொத்துக்கள் சம்மந்தமான தகராறுகள் வயதில் மூத்தவர்களைக் கொண்டோ , பெரும்பான்மைக் கருத்தின் அடிப்படையிலோ தீர்க்கப் படும். இரு அணியினரின் கருத்துக்கள் தோற்கும் நிலையில் சொத்து அரசையே சாரும். சொத்துக்கு உரிமையானவர் இல்லாத பட்சத்தில் அரசு அந்த சொத்தைக் கையகப் படுத்தி நேர்மையான எந்த முறையிலும் அதைப் பகிர்வு  செய்யலாம். அதில் தவறில்லை .

விற்பனை சம்மந்தமான விஷயங்கள்:
ஒரு வீட்டை விற்கும் உரிமையாளர் அவ்வீட்டின் முன்னிலையிலேயே அண்டையில் உள்ளவர்கள் மத்தியில் விற்பனை நடத்தலாம். வயல் தோட்டம் அணைகள் அல்லது நீர் நிலைகளின் உரிமையாளர்கள் அவற்றின் எல்லையில் அல்லது அண்டை கிராமத்துப்  பெரியோர்கள் முன்னிலையில் விற்பனையை நடத்தலாம். அவ்வாறு நடத்தும் பொழுது, அதில் எந்தத் திருட்டுத்  தனத்தையும் பெரும்பாலும்  செய்ய இயலாது. இதனால் வாங்குபவர் பாதுகாக்கப் படுவதுடன் , தேவையற்ற வழக்குகளையும் தவிர்க்கலாம்.

வரிவிதிப்பு:
சொத்தில் உரிமையாளர் தனது விருப்பமான விலையைக் கூறி மூன்று முறை அறிவிக்கலாம். வாங்குபவர்களுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு ஓர் உயர்ந்தவிலை நிர்ணயமானால் அறிவித்த விலைக்கும், விற்கப்பட்ட விலைக்கும் உள்ள வேறுபாட்டுத் தொகை கருவூலத்தில் உடனடியாக செலுத்தப்பட வேண்டும். விற்பனை பேரத்தில் வெற்றி பெற்றவர் விற்பனைக் கான வரியைச் செலுத்தும்  படி  இருக்கும்.

மறு விற்பனை:
ஏலத்தில் அதிக விலைக்குக் கேட்டவர்  சொத்தை ஏழு நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளாவிட்டால் சொந்தக்காரர் அதனை மறு விற்பனை செய்யத் தடை இல்லை.

அத்துமீறல்:
ஒருவர் பிறரது கட்டுப்பாட்டின்  கீழ் உள்ள எல்லையில் அனுமதி பெறமால்  பிரவேசிப்பது அத்துமீறுதல்  ஆகும். இதற்கு அபராதங்கள் விதிக்கப்  படுவதுடன் ,தேவைப்பட்டால்  தண்டனைகள் தரவும் சட்டத்தில் இடமுண்டு. ஆனால் , அதே சமயத்தில் பிச்சைக் காரர்கள், வணிகர்கள், குடிகாரர்கள்  அல்லது பைத்தியக்காரர்களுக்கு இது பொருந்தாது. அது போல அண்டையில் உள்ளவர்கள் நிர்பந்தமான சூழ்நிலையில் , ஏதேனும்  ஆபாயத்தின் காரணமாய் பிரவேசிப்பதும் அத்துமீறல் ஆகாது.    

இழந்த அல்லது திருடப்பட்ட சொத்துக்களைக் கையாளும் முறை:
ஒருவர் தனக்குச் சொந்தமில்லாத பொருளை வைத்து இருப்பது கண்டறியப்படும் நிலையில் அப்பொருள் வழி தவறிய அல்லது கவனிப்பாரற்ற பொருள் என்று நிரூபிக்கப் பட  வேண்டும். அப்பொழுது தான் அவர் குற்றமற்றவர்  என்று விடுவிக்கப்படுவார். இல்லை எனில் அவர் தண்டனைக்கு உள்ளாக நேரிடும். அப்பொருளும் அரசாங்கத்தால் பறிக்கப்படும்.

அதுபோல, ஒருவர் தமது இழந்த உடைமையை வேறொருவர் வைத்து இருப்பதாய் கருதினால் அதனைப் பெற அவர் நீதிமன்றத்தை அணுகலாம். தொலைந்து போனதாய்ச் சொல்லப்படும் சொத்தை வைத்து இருப்பவரிடம் நீதிபதி குறுக்கு விசாரணை செய்வார். அதனை வைத்து இருப்பவர் சட்டபூர்வமாய் வாங்கி இருந்தாலும் , யாரிடம் இருந்து வாங்கப் பட்டதோ அந்த  நபரைக்  கொண்டு வந்து நிறுத்த முடியாத நிலையில் , உரியவரிடம் அப்பொருளை ஒப்படைத்தாலே அவர் விடுவிக்கப்படுவார். முறையற்ற வழியில் பெறப்பட்ட பொருள் எனில் பொருளுக்கு உரிய  விலையோடு , திருட்டுக்கான அபராதமும் விதிக்கப்படும்.

கண்டெடுக்கும் புதையலை கையாளும் வழிமுறைகள்:
கண்டறியப்பட்ட சுரங்கங்கள், கற்கள் ,பொக்கிஷங்கள் பற்றி அதற்கான அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவது தண்டிக்கப் பட வேண்டிய குற்றம் ஆகும். விலை உயர்ந்த பொருள்களைக்  கண்டறியும் துப்புரவுத் தொழிலாளிக்கான பரிசு அப்பொருளின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். அவ்வாறு கண்டெடுக்கப்பட்டவை கருவூலத்தைச் சாரும். புதையல் அல்லது பொக்கிஷங்களைக்  கண்டரிபவர்கள் அதிகாரிகளாயிருப்பின் , அப்பொருளின் மதிப்பில் 12 இல் ஒரு பங்கையும் , பிறர் ஆறில் ஒரு பங்கையும் பரிசாகப் பெறுவர். 1,00,000 பணத்திற்கு அதிகமான புதையல் அரசனை சாரும். கண்டெடுக்கப் பட்ட புதையல் தனது முன்னோர்களால் புதைக்கப்பட்டு , தனக்கு வாரிசுரிமையும் இருப்பின் ஒரு நேர்மையான குடிமகன் அச்சொத்தை வைத்துக் கொள்ளலாம்