பதினைந்தாவது அத்யாயம்
( கௌடில்யரின் பொதுவான கருத்துக்கள், )
பின்வரும் பண்புகளைக் கொண்ட எதிரி எளிதில் தோற்கடிக்கப் படக் கூடியவன் : உயர்குடியில் பிரவாதவன், பேராசை உடையவன், சூழ்ச்சி மிக்கவன், ஆற்றல் அல்லது ஆர்வமற்றவன், விதியில் நம்பிக்கை உடையவன் , நியாயமற்ற முறையில் செயல்படுபவன், எப்பொழுதும் பிறருக்குத் தீங்கு செய்பவன், திருப்தி அற்ற நாட்டு மக்களைக் கொண்டவன், ஆதரவு அல்லது பலம் இல்லாதவன்.
பொதுவாக, ஒரு அரசனுக்கு ஏற்ற நண்பர்கள் : ஓர் அரசனின் குடும்பத்திலோ அல்லது அதற்கு இணையான குடியிலோ பிறந்த ஒருவன் அவ்வரசனின் " இயற்கையான கூட்டாளி" எனப்படுவான் . செல்வம் அல்லது அடைக்கலம் தேடி கூட்டு எற்படுத்துவோன் " தூண்டப்பட்ட கூட்டாளி " எனப்படுவான்.
நாட்டின் பின்புறம் உள்ள எதிரிகள் நாட்டின் முன்புறம் உள்ள எதிரியுடன் கூட்டணி சேர்வர். அதுபோல, வெற்றி பெரும் ஓர் அரசனின் குறிக்கோளை உடைய மற்றோர் அரசன், தோழமை கொண்ட அண்டை நாட்டு அரசன் ஆவான்.
சமமான அல்லது அதிக ஆற்றல் உடையவர்களுடன் சமாதானத்தையும், ஆற்றல் குறைந்தவர்களிடம் போரையும் மேற்கொள்ளலாம். ஆற்றல் மிக்கவரிடம் போர் செய்தல் யானையுடன் போர் புரிவதர்க்குச் சமமாகும். போர் புரிபவன் நசுக்கப்படுவான். சமமானவருடன் செய்யும் போர் இரு மண் பானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொல்வதர்க்குச் சமம். அதாவது , இரு பக்கங்களிலும் சேதாரம் ஏற்படும். குறைவான ஆற்றல் உடையோரிடம் மோதுதல், மண்பாண்டத்தைக் கல்லால் அடித்தல் போன்றது. எளிதான வெற்றி, ஆற்றல் மிக்கவருக்குக் கிட்டும்.
எதிரியை விட பலமடங்கு விரைவாகவும், கூடுதலாகவும் முன்னேறும் ஒருவன் எதிரியைப் புறக்கணிக்கலாம். அதுவே, ஒருவனின் சொந்த முயற்ச்சிகள் தோற்றாலோ அல்லது எதிரி செழித்தாலோ அவன் வீழ்ச்சி அடைவான். தனது வீழ்ச்சி குறுகிய காலத்துக்கு மட்டுமே , விரைவில் மீளலாம் என்ற நம்பிக்கை உடைய ஒருவன் எதிரியின் வெற்றியைப் புறக்கணிக்கலாம்.
எதிரியின் கை உயர்தல் ஒருவனுக்கு வீழ்ச்சியாகும். மாறாக , எதிரியின் வீழ்ச்சி ஒருவனுக்கு வெற்றி ஆகும்.
பெரிய முயற்சியின் சிறிய பலனே வீழ்ச்சியாகும் ( தோல்வி என்பது பெரிய விஷயமல்ல; முயற்சியே முக்கியம்) இதன் மறுதலை வளர்ச்சியாகும். ( சிறிய முயற்சியில் பெரிய பலன்) . விளைவும் பயனும் எடுத்துக் கொண்ட முயற்சியும் சமமெனில் ஒருவனுக்கு வீழ்ச்சியும் இல்லை , வளர்ச்சியும் இல்லை . எனவே, சிறப்பான பலன்களை உருவாக்கக் கூடிய முயற்சிகளையே ஒருவர் மேற்கொள்ள வேண்டும்.
விசுவாசம் இல்லாத வேலைக்காரன், ஒழுக்கமற்ற மனைவி , முட்டாள் சிஷ்யன் போன்றோர் கிடைத்தால் அனைத்தையும் கற்ற அறிஞன் கூட வருத்தமடைவான். காரணம், இவர்களுடன் வாழ்வது விஷமுள்ள நாகத்துடன் இருப்பதர்க்குச் சமானம் என்கிறார் கௌடில்யர் .
உன் செலவங்களை எதிர்காலத்துக்காக சேர்த்துவை, காரணம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யார் அறிவார் என கௌடில்யர் கூறுகிறார்.
எந்த நாட்டில் நீ மதிக்கப்படவில்லையோ, எந்த நாட்டில் நீ வாழ்வதற்கு புகழிடம் கொடுக்கப்படவில்லையோ, எந்த நாடு மோசமான திருடர்களைக் கொண்ட நாடாக உள்ளதோ , அந்நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது என கௌடில்யர் கூறுகிறார்.
நல்ல மருத்துவர்கள், நதிகள், வழிகாட்ட ஒரு தலைவன் அல்லது அரசன் , போஷிக்க செல்வந்தர்கள், மத ரீதியான காரியங்களைச் செய்து வைக்க புரோகிதர்கள் என மேற்கண்ட ஐந்தும் எந்த நாட்டில் இல்லையோ, அந்த நாட்டில் ஒரு நாள் கூட வசித்தல் கூடாது என கௌடில்யர் கூறுகிறார்.
ஒரு வேலையாளின் விசுவாசத்தை அவன் வேலையில் காட்டும் அக்கறையைக் கொண்டும், ஒரு நெருங்கிய உறவினனின் உண்மையான அன்பை இக்கட்டான சூழ்நிலையிலும், ஒரு நண்பனின் உண்மையான நட்பை ஆபத்துக் காலத்திலும், மனைவியின் அன்பை துரதிஷ்டம் வரும் பொழுதும் அறிந்து கொள்ள முடியும் என்பது கௌடில்யரின் கருத்து.
ஒரு நல்ல நண்பன் என்பவன், துரதிஷ்டமான சூழ்நிலையிலும், உதவி தேவைப்படும் வேளையிலும், பஞ்ச காலத்திலும், யுத்த காலத்திலும், மரணப்பள்ளத்தாக்கிலும் கூட ( இன்னொரு நண்பனைக் ) கைவிடாதவனாக இருத்தல் வேண்டும் என்பது கௌடில்யரின் கருத்து .
ஒரு மனிதன் நல்ல குலத்தில் பிறந்த அழகில்லாத பெண்ணைக் கூட மணக்கலாம். ஆனால், தாழ்ந்த குடியில் பிறந்த அழகுள்ள பெண்ணை மணத்தல் அவனுடைய வம்சத்தையே வேர் அறுத்து விடும் என்கிறார் கௌடில்யர் .
பாய்ந்து ஓடும் நதிகளையும், ஆயுதங்கள் தாங்கிய மனிதர்களையும், கொம்புகள் கொண்ட வலிமையான மிருகங்களையும், சிரிக்கும் இளம் பெண்களையும், அரச குலத்தில் பிறந்த செல்வந்தர்களையும் நம்பாமல் இருப்பது நல்லது. மேற்கண்டவர்களால், ஒரு மனிதனுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்.
ஒரு மனிதன் முழுக்க, முழுக்க நேர்மையாளனாக இருக்க இயலாது. இருக்கவும் கூடாது என்கிறார் சாணக்யர். அப்படி முழுவதும் நேர்மையைப் பின்பற்றும் மனிதனானவன் எப்படி ஓங்கி, நெடிந்து வளர்ந்த மரங்கள் காட்டில் முதலில் வெட்டப்படுகிறதோ அவ்வாறே இந்த சமூகத்தால் வெட்டபடுவான்.
எவன் ஒருவன் கீழ்படிகிற நல்ல மகனையும், சொல் கேட்டு நடக்கும் கற்புள்ள நல்ல மனைவியையும், அதீத செல்வங்களைக் கொண்டும் இருக்கின்றானோ. அந்த மனிதன் பூமியில் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்கிறார் கௌடில்யர் .
உனக்கு முன்னாள் தேன் ஒழுகப் பேசி , பின்னால் சென்று அவதூறு பேசும் ஒருவன் கறந்த பாலுக்கு அடியில் இருக்கும் நஞ்சைப் போன்றவன் அவனது உறவை முறித்துக் கொள்ளுதல் நலம் என்கிறார் கௌடில்யர் .
உனது ரகசியங்களை நல்ல நண்பன் என்று கருதிக் கூட யாரிடமும் சொல்லி விடக்கூடாது . பிற்காலத்தில், எவனை நீ நல்ல நண்பன் என்று நினைத்தாயோ, அவனே உன் மீது கோபம் அல்லது பழி உணர்ச்சிக் கொண்டு உன் ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட வாய்ப்பு உள்ளது. காரணம், எவனையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றும் இயல்பு வீதிக்கும், காலத்துக்கும் உண்டு என்கிறார் சாணக்யர்.
எந்த தந்தை , தன் மகனை நல்ல விதத்தில் வளர்க்கத் தவறுகிறானோ . அந்த மகனே காலப்போக்கில் அந்த தந்தைக்கு முதல் எதிரி ஆகிவிடுவான் என்பது கௌடில்யரின் கருத்து .
நற்குணம் கொண்ட மனைவியைப் பிரிதல், தன் சொந்த ஜனங்களே ஒருவனை ஒதுக்கி வைப்பது, யுத்தகளத்தில் உயிர்பிழைத்த ஜென்ம விரோதி, மோசமான குணங்களைக் கொண்ட அரசனிடம் பணியாற்றுதல், மிக மோசமாக நிர்வகிக்கப்படும் அறிஞர்கள் அற்ற ( முட்டாள்களைக் கொண்ட ) அரச சபை , இளமையில் வறுமை போன்ற ஆறும் ஒரு மனிதனை நெருப்பு இல்லாமலே எரிக்கக் கூடியவை.
நதிக்கரை ஓரத்தில் வளர்ந்த மரங்கள். அடுத்தவர் வீட்டில் வசிக்கும் அபலைப் பெண், ஆலோசகர்களே இல்லாத அரசன் ஆகிய மேற்கண்ட இவைகள் ஒரு நாள் அழிவது நிச்சயம்.
ஒரு பிராமணனின் பலத்தை அவன் கற்ற கல்வியின் மூலமும், ஒரு அரசனின் பலத்தை அவனது படைகளின் எண்ணிக்கையைப் பொருத்தும், ஒரு வைசிய ஜாதியில் பிறந்தவனுடைய ( வியாபாரம் செய்யும் குலத்தில் ) பலத்தை அவன் ஈட்டிய செல்வத்தின் மூலமும், மற்ற ஜாதியினரின் ( சூத்திரர்கள்) பலத்தை அவர்கள் சமூகத்திற்கு செய்யும் சேவையைப் பொருத்தும் அறியலாம்.
இந்த உலகத்தில் நிம்மதியான மனிதர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எவரும் இல்லை. அது போல,பிரச்சனை இல்லாத மனிதர்களும் இல்லை, நோய்கள் மற்றும் துக்கங்கள் இல்லாத மனிதர்களும் இல்லை, எப்பொழுதும் சந்தோஷமாக காணப்படுபவர்களும் இல்லை. ஆக, ஒரு மனிதனாகப் பட்டவன் எல்லாவற்றையும் கடந்தாக வேண்டும் என்கிறார் சாணக்யர் . ஊழியைத் தாங்கும் கற்கள் தான் சிலையாகப் பரிமானம் அடைகிறது , அது போல கஷ்டத்தைத் தாங்கும் மனிதன் தான் பிற்காலத்தில் போற்றப்படுவான் என்பது அவர் கூற்று.
ஒரு கெட்ட நடத்தை கொண்ட நண்பனைக் காட்டிலும், விஷமுள்ள நாகமே பரவா இல்லை காரணம் , விஷமுள்ள நாகம் ஒரு முறை தான் கொட்டி உயிரைப் பறிக்கும் , ஆனால் கெட்ட நடத்தை உடைய நண்பனோ ஒவ்வொரு நொடியும் உயிருக்கு கேடுகளை விளைவிப்பான்.
கடல் கூட சில சமயங்களில் எல்லைகள் தாண்டும். ஆனால் உண்மையான ஞானத்தைப் பெற்று ஞானத்தின் விளிம்பில் இருக்கும் மனிதன் எப்பொழுதும் கொண்ட கொள்கையில் உறுதியுடன் ஒரே மன நிலையில் தான் இருப்பான்.
ஒரு குடும்பத்தைக் காக்க அந்த குடும்பத்தில் இருக்கும் ஒருவனை பலி இட வேண்டி இருக்கும். ஒரு கிராமத்தைக் காக்க ஒரு குடும்பத்தையே பலியிடவேண்டி இருக்கும். அதுபோல பேரரசைக் காக்க ஒரு கிராமத்தையே பலி இடுவதில் தவறு இல்லை என்கிறார் சாணக்யர்.
மனதில் ஒரு காரியத்தை நினைக்க வேண்டும். அதனை மந்திரம் போல மனதில் வைத்து காக்க வேண்டும். காரியம் வெற்றி பெற்ற பிறகே அதனை மற்றவர் இடம் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். இதுவே , ஒரு காரியம் நல்ல முறையில் நடக்க உதவும் சூத்திரம் என்கிறார் கௌடில்யர் .
நல்ல செல்வந்த நிலையில் இருப்பவனை எப்படி வறுமை அண்டாதோ. எப்பொழுதும் தெய்வத்தின் திருநாமத்தை சொல்லுபவனை எப்படி பாவம் அண்டாதோ. என்றும் அமைதியான முறையில் தியானத்தில் பல மணி நேரங்களை கடக்கும் ஒருவனை சண்டை சச்சரவுகள் அண்டாதோ . அப்படியே எல்லா நேரங்களும் விழிப்புடன் இருக்கும் மனிதனை பயம் அண்டாது என்கிறார் கௌடில்யர்.
எப்படி மரங்கள் உராயும் பொழுது ஏற்படும் ஒரு சிறு தீப்பொறி , ஒரு காட்டையே அழித்து விடுமோ . அது போலவே , கெட்ட நடத்தை உள்ள மகன் தனது குலத்தையே அழித்து விடுவான் என்கிறது அர்த்தசாஸ்திரம் .
எப்படி இரவுப் பொழுது நிலவின் ஒளியால் அலங்கரிக்கப்படுகிறதோ அது போல நல்ல நடத்தையுள்ள மகனின் செயலால் , அவன் குடும்பமே சமூகத்தில் ( அவன் மூலம் ) அலங்கரிக்கப்படும் என்கிறது அர்த்தசாஸ்திரம் .
ஒரு மகனை 5 வயது வரை செல்லம் கொடுத்து வளர்க்க வேண்டும். 15 வயது வரை பிரம்பைக் கொண்டு வளர்க்க வேண்டும், ஆனால் , அதுவே 16 வயதைத் தாண்டியவுடன் அவனை நண்பனைப் போல நடத்த வேண்டும் என்கிறது அர்த்தசாஸ்திரம் .
வேளாண்மை பற்றி அர்த்தசாஸ்திரம்:
தாவரங்களை கீழ்க்கண்ட முறையில் பாதுகாக்கலாம் :
உரமிடுதல் : புதிதாய் பிடித்து வரப்பட்ட மீன் மற்றும் தாவரச் சாறு சிறந்தவை.
பாம்புகள் : பருத்தி விதையை எரிப்பதனால் ஏற்படும் புகை பாம்புகளை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும்.
சிறு பருவத்திலேயே அழியும் தாவரங்களைக் காட்டிலும் வளர்ந்து அழுகும் நிலையில் ஏற்படும் நஷ்டமே மிகவும் மோசமானது. ஏனெனில் வளரும் கட்டத்தில் அதற்காக எடுத்துக் கொண்ட உழைப்பும் வீணாகும்.
