பதினான்காம்  அத்யாயம்

பதினான்காம் அத்யாயம்

bookmark


( இராணுவ ஒருங்கிணைப்பு, இராணுவத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் அபாயங்கள்,மற்றும்  படைகளின் பாதுகாப்பு உட்பட போர் பற்றி கௌடில்யரின் விரிவான  விளக்கங்கள்)

சிறந்த ராணுவம் என்பது நன்கு ஊதியம் அளிக்கப்பட்டு , கௌரவிக்கப்பட்டு , ஆற்றலுடன் திகழ்வதாகும். அத்தகைய இராணுவத்தில் அதிகாரிகளுக்கிடையில்  கருத்து வேறுபாடுகள் இருக்காது. அது போல, நம்பிக்கை  துரோகிகளும் இருக்க மாட்டார்கள், அது சிதறிக்கிடவாமல்  ஒன்று இணைந்து இருக்கும்.

இராணுவத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் அபாயங்கள்

1.இராணுவத்திற்கோ , இராணுவத்தில் உள்ள முக்கிய தளபதிகளுக்கோ உரிய மரியாதை அளிக்கப்படாமை.
2.இராணுவத்தில் உள்ளவர்களுக்கு சிறந்த ஊதியம் அளிக்கப் படாமை.
3.படைவீரர்களுக்கு   ஆரோக்கியமின்மை. 
4.நீண்ட அணிவகுப்புக்கு பின்னர்   அவர்கள் ( இராணுவ வீரர்கள் )   களைப்படைதல்.
5.போருக்குப்பின் ஆற்றலை இழத்தல்.
6.நேரடி யுத்தத்தில் தோல்வி அடைதல்.
7.பொருத்தமற்ற இடத்தில், பொருத்தமற்ற பருவ காலத்தில் போர் புரியும் படியான நிலைமை. 
8.மனவுறுதி குறைதல். 
9.தலைமை அதிகாரியால் கைவிடப்படுதல். 
10.படைகளில் பெண்கள் இடம் பெறுதல். படைகளில் துரோகிகள் இடம்பெறுதல். 
11.படைகளில் கோபக்காரர்கள்  இருத்தல்.
12.படைகள் எதிரிகளின் படைகளால் எல்லாப் பக்கமும் சூழப்படுதல்.
13.இராணுவத்தில்  ஒற்றுமையின்மை. 
14.தலைவரற்ற படை.
போன்றவைகள் ஒரு இராணுவத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

மேற்கண்ட அபாயங்களை  கையாளும் முறைகள் பற்றியும் அர்த்தசாஸ்திரம்  கீழ்க்கண்டவாறு விளக்குகிறது

மரியாதை அளிக்கப்படாத படை பணம் அளித்து மரியாதை செய்யப்பட்டால் நன்கு போர் புரியும். ஆனால் அவமதிக்கப்பட்ட படையோ மனதினுள்  வஞ்சம் வைத்து  இருக்கும். ஊதியம் அளிக்கப்படாத படைக்கு உடனடியாய் ஊதியம் அளிப்பதன் மூலம் செயல்படச் செய்யலாம். ஆனால் பலவீனமான படை போருக்கே லாயக்கற்றதாகும் . 

புதிதாய் வரவழைக்கப்பட்ட  படை அனுபவமிக்க படைகளுடன் சேருமாயின் அவ்விடத்தைப் பற்றி அறிந்து நன்கு கைதேர்ந்த முறையில் போர் செய்யும். ஆனால், நீண்ட தூர அணிவகுப்பில் களைத்த படைகளால் அவ்வாறு இயலாது.  மிகவும் சோர்வுற்ற வீரர்கள் குளித்து, உணவுண்டு, உறங்கிய பின் நன்கு போர் செய்ய இயலும் . ஆனால், ஆற்றல் குறைபாடுற்ற வீரர்களால் அவ்வாறு செய்ய இயலாது.

விரட்டியடிக்கப் பட்ட ஒரு படைக்கு  ஆற்றல் மிக்க  தலைவன் கிட்டுவானாயின் , அதனால் மீண்டும்   செயலாற்ற இயலும் . ஆனால்  , முறியடிக்கப்பட்ட ஒரு படை எண்ணற்ற வீரர்களை போரில்  இழந்து விடுவதால் அதனால் மீண்டும் எழ இயலாது.  பருவ காலங்கள்  , பொருத்தமற்று மாறும் பொழுது , அதனை சமாளிக்க அப்  பருவகாலத்துக்கு  ஏற்ற உடைகள், வாகனங்கள், ஆயுதங்கள் போன்றவற்றின் உதவியோடு படை வீரர்களால் போரைத் தொடர இயலும். ஆனால், பொறுத்த மற்ற நிலப்பரப்புகளில் இயக்கம் தடை படுவதால் ,மேற்கொண்டு  படையெடுத்துச் செல்வது கடினம் ஆகும்  .

பெண்கள் அடங்கிய படை பெண்களை நீக்கிவிட்டுச் செயலாற்றலாம். ஆனால், எதிரிகள் மற்றும் துரோகிகளைக் கொண்ட படைகள் முழுமையாய் செயலாற்றுவது கடினம். தங்கள் தலைவனிடம் கோபம் கொண்ட படைகள் பரிசளித்தல், பாராட்டு மூலம் மீண்டும் நன்கு செயலாற்றும் . ஆனால் ஒற்றுமை அற்ற படையிலோ ஒவ்வொருவரும் மற்றவரிடம் வஞ்சம் கொண்டு , அதன் காரணமாக   செயலாற்றவே  மறுப்பர். 

அதுபோல , தடை செய்யப்பட்ட படை மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்துப் போர் புரியும். ஆனால் ( எதிரியால்) சூழப்பட்ட படை எத்திசையிலும் இயங்க இயலாது, அதனால் அவை சரணாகதி அடைய வேண்டி வரும் , அல்லது தீரத்துடன்  போர் செய்து வீரமரணத்தை அடைய முடியும்  .

ஒரு இராணுவத்தின் படையை மேற்கொண்டு பாதிக்கக் கூடிய அம்சங்கள்:

1.நீரற்ற பகுதியில் மேற்கொள்ளும் நீண்ட தூர அணிவகுப்பு. 
2.உணவு, எரிபொருள் அல்லது தண்ணீர்த் தட்டுப்பாடு. 
3.கடினமான பாதையில் அணிவகுத்துச் செல்லுதல் ( இந்நிலையில், கொண்டு செல்லப்படும் உணவு, உறங்கும் சாதனங்கள், ஆயுதங்கள், இவற்றைக் கணக்கிட்டு ஒரு அரசனின் படை வீரர்களின் எண்ணிக்கையை அவன் எதிரி கண்டுபிடித்து   விடுவான். இதனால் மேற்கண்ட அனைத்தையும் ஒரு அரசனாகப்பட்டவன்  மறைத்து வைத்து எடுத்துச் செல்ல உத்தரவு இட  வேண்டும்). 
4.எதிரிகளின் தாக்குதலில் துன்பப்படும்படியான  நிலையை அடைதல். 
5.நீண்ட தூர அணிவகுப்பில் ஏற்படும் பசி, தாக வறட்சி.
6.சேறு நிறைந்த அல்லது ஆழமான நதிகளைக் கடந்து செல்லுதல் .
7.மலைகளில் ஏறுதல்  அல்லது இறங்குதல் போன்ற சூழ்நிலையைப் படையெடுக்கும் பொழுது வீரர்கள் சந்தித்தல் .
8.மலைப்பிரதேசம் அல்லது குறுகிய பாதையில் ஒரே நேரத்தில் பலர் வரிசையில் செல்ல வேண்டிய நிலை. 
9.அணிவகுப்பு அல்லது ஓய்வின் பொழுது தேவையான கருவிகள் இல்லாமை. 
10.நோய்கள், தொற்றுகள் அல்லது  யானைகள், குதிரைகள் மற்றும் படை வீரர்கள் நோய்வாய்ப் படுதல்.
ஆக,  மேற்கண்ட இவை அனைத்தும் ஒரு இராணுவத்தின் செயல்பாட்டை மேற்கொண்டு பாதிப்பவை ஆகும்.

போர்கள்
வெளிப்படையான போர்:நியாயப்படி செயல்பட வேண்டிய நிலையில்,  போர் நிகழப் போகும் நேரம் மற்றும் இடத்தை முன்னரே அறிவிக்க வேண்டும். எதிரி அதிக ஆற்றல் மிக்கவனாயிருப்பின் , அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், போர் நிகழும் இடம் தனக்கு எற்றதாயிருப்பின் ஓர் அரசன் வெளிப்படையான போருக்குத் தயாராகலாம்.
மறைமுகப்போர்:மேற்குறிய அம்சங்கள் திருப்தி அளிக்காத நிலையில் மறைமுகப் போர் மேற்கொள்ளப்படலாம்.  எதிரிப்படை அபாயங்களால் பாதிக்கப் பட்டு இருக்கும் போதோ, சாதகமில்லாத நிலையிலோ தாக்கப் படலாம். சாதகமான நிலப்பரப்பில் எதிரி இருப்பினும் ஓர் அரசன் வலூவான  அனைத்து வகை ஆதரவையும் பெற்ற நிலையில் எதிரியைத் தாக்கலாம். முதலில் தனது யானைகளை உபயோகித்து எதிரியின் கூட்டணிப் படையைப் பிளவுரச் செய்து , பின் தாக்கலாம். நேரடித் தாக்குதல் பயனளிக்காத நிலையில் மறைமுகத் தாக்குதலே சிறந்தது. சேனையின் ஒரு புறத்தில் தாக்குதல் பலனற்ற நிலையில்,  மற்ற பக்கங்களில் இருந்தும் தாக்குவது சிறந்தாதாகும். எதிரிப் படைகளை முதலில் வேற்று நாட்டுப்படை அல்லது காட்டுவாசிகளைக் கொண்டு தாக்கி சோர்வடையச் செய்து , பின் தனது சொந்தப்படைகள் கொண்டு தாக்க வேண்டும். அதுவே புத்திசாலித் தனம் ஆகும் .

அரசன் பலவீனமான படைகளின் பின்னே பலம் பொருந்திய படைகளை மறைத்துப் போரிட வேண்டும். முதலில் பலவீனமான  படையை எதிரியின் பால் ஊடுருவச் செய்து வழி ஏற்படுத்தி பின் பலம் மிக்க படைகளின் உதவியால் வெல்லலாம். எதிரியின் வீரர்களை இரவெல்லாம் விழிக்கச் செய்து பகலில் அவர்கள் தூங்கிய அல்லது மயங்கிய நிலையில் தாக்கலாம். காற்று அல்லது சூரியன் இருக்கும் திசையில் போர் செய்தால் எதிரிகள் எளிதில் தாக்கப்படலாம். போருக்கு ஆயத்தமாதலில்  மதிய வேளைகளில் படை வீரர்கள் சோர்வாக இருப்பார்கள் . அவ்வேளையில் அவர்களைத் தாக்கலாம். எதிரிகள் ஏதேனும் இடர்ப்பாட்டில்   சிக்கி இருந்து  அதைச் சரி செய்ய முயன்று கொண்டிருக்கும் போது தாக்குவது சிறப்பு. இவை அனைத்தும் மறைமுகப் போரில் இடம் பெரும் தந்திரங்களாகும்.

மறைந்து இருந்து போர் செய்வதற்கான சந்தர்ப்பங்கள்:
பாலைவனங்கள், குறுகிய பாதைகள், புதர்கள், மலைகள், சேறு, பள்ளத்தாக்கு, சமமற்ற நிலப்பரப்புகள், படகுகள் , பனி  மற்றும் இரவு நேரங்கள் இவை மறைந்து இருந்து தாக்குவதர்க்குச் சரியான சந்தர்ப்பங்களாகும்.