பண்டைய காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற கணியர்களும் அவர்கள் எழுதிய பாடல்களும் ஒரு பார்வை

bookmark


பண்டைய காலத்தில் வாழ்ந்த கணியர்களில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர்கள் இருவர் :-

1. கணியன் பூங்குன்றனார் 2. கணிமேதாவியார்

1. கணியன் பூங்குன்றனார்

கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். கணிமேதையார், கணிமேவந்தவள் என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை.

இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது. அதில் ஒரு பாடல் பின்வருமாறு:-

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

பொருள் : எல்லா ஊரும் எம் ஊர்

எல்லா மக்களும் எம் உறவினரே

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமை யில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்தது இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல

இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்

ஆதலினால், பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

இதே போல  நற்றிணையிலும் இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நற்றிணை 226

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்

பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்

நாந்தம் உண்மையின் உளமே அதனால்

தாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து

என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்

சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்

இன்ன நிலைமைத்து என்ப

என்னோரும் அறிப இவ் உலகத்தானே.

பொருள் : பொருள் தேடப் போய்வரட்டுமா என்கிறான் தலைவன். போக வேண்டாம் என்று சொல்லும் தலைவியின் கூற்றாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

நல்ல மாந்தர் யார், நல்ல மன்னர் யார், உயர்தவம் எது என்றெல்லாம் விளக்கிவிட்டுத் தோழியிடம் அவள் தொடர்கிறாள். அவர் இருப்பதால் தான் நாம் நன்னுதலோடு இருக்கிறோம். (அவர் பிரிந்தால் நுதல் பசந்துவிடும் அல்லவா) அதனால் தாம் செய்யும் பொருளின் பயனை அவரே உணரவில்லை. வேர்வை கசிய வெயில் கொளுத்தும் நீண்ட பாதையில் அவர் செல்ல, நான் இங்கே இருந்துகொண்டு எம் காதலர் சென்றார் என்று சொல்லிக்கொண்டு இருப்பது முறையா? உலகில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் பிரிவு கூடாது என்று தெரியும் என்கிறாள்.

கணிப்பு

பூங்குன்றனார் கணிப்பு அவரது இரண்டு பாடல்களிலும் உள்ளன.

பொருண்மொழிக் காஞ்சியில்

உலகைக் கணித்துப் பார்த்து யாதும் ஊரே என்றார்.

மக்களைக் கணித்துப் பார்த்து யாவரும் கேளிர் என்றார்.

நன்மை தீமைகளைகு கணித்துப் பார்த்து அவை பிறர் தர வாரா என்றார்.

சாதலைக் கணித்துப் பார்த்து அது புதிதன்று என்றார்.

வாழ்தலைக் கணித்துப் பார்த்து அது பிறவியால் வந்தது என்றார்.

பிறந்ததால் வரும் வாழ்க்கையில் வரும் இன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை இனிது என மகிழக் கூடாது என்றார்.

வாழ்க்கையில் வரும் துன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை முனிந்து வாழ்க்கையே இன்னாது (துன்ப மயமானது) என வெறுக்கக் கூடாது என்றார்.

பிறவியைக் கணித்துப் பார்த்து அது மின்னல் போன்றது என்றார். மின்னல் எப்போதாவது எங்கோ மழை பொழிவது போன்றது என்றார்.

வாழ்க்கையைக் கணித்துப் பார்த்து அது மல்லல் பேர் யாறு போன்றது என்றார். (வளமான பெரிய ஆற்று நீரோட்டம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலச் சாவை நோக்கி ஓடும் - என்பதைப் பிறிது மொழிதல் அணியின் பாற்படுத்து உய்த்துணர வைத்தார்)

வாழ்க்கையில் எதிர்ப்புகள் இருப்பதைக் கணித்துப் பார்த்து ஆறு பாறைகளில் மோதிக்கொண்டு ஓடுவதை எண்ணிப் பாரக்கும்படி நம்மைத் தூண்டினார்.

நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார். (ஊழ் = 'முறை' என்பது ஆற்று நீரின் ஓட்டம். முயற்சி என்பது உயிர்படகைச் செலுத்தும் துடுப்பு)

இந்த உலகியல் உண்மைகளைத் (பொருண்மொழிக் காஞ்சியைத்) திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.

இந்தத் தெளிவின் பயன் யாது?

மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது.

அகத்திணைப் பாடலில் வரும் அற்புதக் கருத்துக்கள்

பாலை நிலத்து மக்களின் வாழ்க்கையையும் இவர் புதுமையாகப் பார்க்கிறார்.

மாந்தர் யார்? மரம் சாவும் மருந்து என்பது தீ. பாலை நிலத்தில் தீ இடாதவர் நன்மாந்தர். மலையிலும் காடுகளிலும் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்துக் காய்ந்த பின் தீயிட்டுக் கொளுத்துவர். இப்படிக் கொளுத்திய நிலத்துக்குப் புனம் என்று பெயர். இக்காலத்திலும் மலைவாழ் மக்களிடம் இந்தப் பழக்கம் உண்டு. இக்காலத்தில் புனத்தைப் புனக்காடு என்கின்றனர். பாலை நிலத்தில் இவ்வாறு தீ இட்டால் காடு முழுவதும் எரிந்துவிடும். மரம் தழைத்திருக்கும் குறிஞ்சியில் வெட்டிக் காய்ந்த மரங்கள் மட்டுமே எரியும். எனவே பாலை நிலத்தில் தீ இடாதவர் நன் மக்கள் என்கிறார் இந்தப் புலவர்.

உயர்தவம் எது? உடலிலுள்ள வலிமைக்கும், உள்ளத்திலுள்ள தெம்புக்கும் உரம் என்று பெயர். 'நெஞ்சில் உரமும் இன்றி' என்று பாரதியார் பாடுவதை அறிவோம். இப்படிப்பட்ட உரத்தைச் சாகடித்துவிட்டுச் செய்யும் தவம் ஒருவகை. இது உயர்தவம் ஆகாது. உரத்தைக் கொல்லாமல் துறவு மேற்கொள்வதே உயர்தவம். இத்தகைய உயர்தவம் செய்வாரைத் திருவள்ளுவர் நீத்தார் என்கிறார்.

மன்னர் யார்? பிறர் வளம் கெடப் பொன் வாங்காதவர் நல்ல மன்னர். மன்னர் குடிமக்களிடம் வரி வாங்கலாம். ஆனால் அவர்களது செல்வ வளம் அழியும் வகையில் மிகுதியாக வாங்காமல் அளவோடு அவர்களிடமிருந்து பொன் பெற வேண்டும். இப்படிப் பொன் பெற்று ஆள்பவர் நல்லரசர் என்கிறார்.

கணிமேதாவியார்:-

கணிமேதாவியார் என்பவர் கணியர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் பெயரின் அடைமொழி கொண்டு அறியலாம். இவர் ஒரு கணிதர் (சோதிடர்). ஆதலால் தொழிலையும் குறிக்கும் பெயராக இவரது பெயர் அமைந்திருக்கிறது. கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். இவர் சில சங்க மருவிய நூல்களையும், சில சங்கம் மருவிய நூற்பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவராவார்.

ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய இந்த இரு நூல்களையும் "கணிமேதாவியார்" எழுதியுள்ளார். இவற்றைப் பற்றியும் பார்ப்போம்.

ஏலாதி:-

பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி. சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. இந்த ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.

நூல் பெயற்காரணம்

இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம், சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக் கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.

எடுத்துக்காட்டு

இடையின் அழகோ, தோளின் அழகோ அல்லது ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா. எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று பின்வருமாறு:

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்

நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)

எழுத்தின் வனப்பே வனப்பு.

திணைமாலை நூற்றைம்பது:-

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.

இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன.

1                 குறிஞ்சி    1    தொடக்கம்    31    வரை    31    பாடல்கள்

2    நெய்தல்    32    தொடக்கம்    62    வரை    31    பாடல்கள்

3    பாலை          63    தொடக்கம்    92    வரை    30    பாடல்கள்

4    முல்லை    93    தொடக்கம்    123    வரை    31    பாடல்கள்

5    மருதம்          124    தொடக்கம்    153    வரை    30    பாடல்கள்

எடுத்துக்காட்டு

பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு

மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்

செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு

நையும் இடமறிந்து நாடு.

தமிழர்கள் கண்டறிந்த மேல் நோக்கு நாள் மற்றும் கீழ் நோக்கு நாள் குறித்த செய்திகள்

கீழ்நோக்கு நாள்

கீழ் நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. மேல்நோக்கு நாட்களில் கூறைபோடுதல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளையும் கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், கடைகோல் போடுதல் போன்ற நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளையும் செய்யலாம் என்று  கூறப்படுகிறது.

மேல்நோக்கு நாள்

மேல்நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நில நடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. மேல்நோக்கு நாட்களில் கூறைபோடுதல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளையும் கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், கடைகோல் போடுதல் போன்ற நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளைச் செய்யலாம் என்றும் தமிழர்களிடம் நம்பிக்கை உள்ளது.