நாராயணனைக் கண்டேன்

நாராயணனைக் கண்டேன்

bookmark

சுவாமிஜி வாழ்ந்த அந்தக் காலத்தில் சாதிப் பிரச்சனைகள் உச்ச கட்டத்தில் இருந்தது. தீண்டத் தகாதவர்கள் என்று கூறி பல சமூகங்களை ஊருக்குள் வர விடாமல் ஒதுக்கி வைத்து இருந்தார்கள் அன்றைய சமூகத்தினர். அந்த சமூகத்தில் ஒரு வகுப்பு தான் சந்தலர்கள். இவர்களை தீண்டத் தகாதவர்கள் என்று கூறி பல தொல்லைகளை அன்றைய சமூக மக்கள் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். எனினும் சுவாமிஜிக்கு இவர்கள் பெயரில் மிகுந்த அன்பு இருந்தது. அவர்களைப் பேலூர் மடத்தில் தோட்ட வேலை செய்ய பணித்தார். எளியவர்களான அம்மக்களிடம் சுவாமிஜி தினந்தோறும் பேசுவார். அவர்களுடைய குறைகளை எல்லாம் கேட்டு உருகுவார்.

ஒரு நாள் அவர்களுடைய துயரங்களைக் கேட்டு விட்டு சுவாமிஜி கண்ணீர் விட்டதும் சந்தலர்கள் கதிகலங்கிப் போனார்கள். இனி சுவாமிஜியிடம் தங்களது துயரக் கதைகளை கூறுவதில்லை என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

சுவாமிஜி அவர்களுக்கு ஒரு நாளாவது விருந்து அளிக்க வேண்டும் என்று விரும்பினார். சந்தலரில் மூத்தவனாக இருந்த கோஷ்டா என்பவனிடம் அதனைத் தெரிவித்தார். அதனைக் கேட்டு கோஷ்டா அதிர்ந்து போனான். அவன் சுவாமிஜியிடம்," சுவாமிஜி! நீங்கள் மிகவும் பெரியவர். உங்களைப் போன்றவர்கள் தரும் விருந்தை உண்டால் எங்கள் சாதி போய்விடும். வேண்டாம் உப்புப் போட்ட எதையும் நாங்கள் சாப்பிடக் கூடாது" என்று தெரிவித்தான்.

சுவாமிஜி அவனை விடவில்லை. உப்பை உணவில் போடாமல் தனியாகத் தருவதாகக் கூறிய பின்பு தான் சந்தலர்கள் சுவாமிஜி அளித்த உணவை உண்ண ஒத்துக் கொண்டார்கள்.

பேலூர் மடத்தில் விருந்து தயார் செய்யப்பட்டது. சந்தலர்களை எல்லாம் அழைத்தார் சுவாமிஜி. எல்லோரையும் அமரச் செய்து பலவிதமான இனிப்புகள், பூரிகள் பரிமாறப்பட்டன. அவர்கள் ஆவலோடு சுவைத்து உண்பதைக் கண்டு கண்ணீர் மல்க சுவாமிஜி பார்த்துக் கொண்டே இருந்தார்.

"இவ்வளவு சுவையான பலகாரங்களை தாங்கள் சாப்பிட்டதே இல்லை" என்று கூறிய சந்தலர்கள் சுவாமிஜிக்கு நன்றி கூறி வணங்கிச் சென்றார்கள்.

எளிய மக்களிடம் தயை காட்டுவதில் சுவாமிஜி பெரும் வள்ளல் போலத் தான் எப்போதும் செயல்படுவார். ஆனால் அதனை மிகவும் வெளிப்படையாக அவர் காண்பித்துக் கொண்டதே இல்லை.

சந்தலர்கள் உணவு அருந்தி விட்டுச் சென்றதும் 'சந்தலர்களில் தாம் நாராயணனையே தரிசித்ததாக சுவாமிஜி சீடர்களிடம் கூறி மகிழ்ந்தார். "இவர்கள் சூது வாது தெரியாத கடவுளின் பிள்ளைகள்" என்றார் சுவாமிஜி.