நாட்டுப் படலம் - 83

bookmark

மங்கையரை மயில்கள் பின்தொடர்தல்

83.

இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.
 
தோகை   மஞ்ஞை - தோகையை உடைய ஆண் மயில்கள்; தடம்
கொள்  சோலைவாய்-  விசாலமான சோலையினிடத்தே; இடம் கொள்
சாயல்  கண்டு-  (தமது பெண் மயில்களின்  பெருமைக்குரிய சாயலைப்
பார்த்து);  இளைஞர் சிந்தை போல்- இளம் வயதினரான ஆண்களின்
(மனத்தைப்   போல;  மலர்  பெய்தாழ்  குழல்-  மலரணிந்த  நீண்ட
கூந்தலையும்;  வடம்   கொள்  பூண்  முலை-  முத்து  மாலைகளை
அணிந்த   தனங்களையும்   உடைய;  மடந்தை  மாரொடு-  அந்தப்
பெண்களுடனே; தொடர்ந்து போவன- பின்தொடர்ந்து செல்வனவாம். 

ஆண்  மயில்கள் சோலையில் உலாவும் பெண்களை சாயலால் மயில்
போன்றிருக்கும்   அவர்களைப்   பெண்மயில்கள்   என்று     கருதிப்
பின்தொடரும்    என்றது    மயக்கவணி.    இளைஞர்:      காளைப்
பருவத்தினரான  ஆண்கள்.  இடம்:  பெருமை.  வடம்: முத்து   வடம்.
தாழ்குழல்: நீண்ட கூந்தல்.                                   52