நாட்டுப் படலம் - 84
வண்மை முதலியன அந்நாட்டில்
இல்லாமைக்கு ஏது
84.
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.
ஓர் வறுமை இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும்
இல்லாததால்; வண்மை இல்லை- கொடைக்கு அங்கே இடமில்லை;
நேர் செறுநர் இன்மையால்- நேருக்கு நேர் போர்புரிபவர்
இல்லாததால்; திண்மை இல்லை- உடல் வலிமையை எடுத்துக்காட்ட
வாய்ப்பில்லை; பொய் உரை இல்லாமையால்- பொய்ம் மொழி
இல்லாமையால்; உண்மை இல்லை- மெய்ம்மை தனித்து
விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம்
மிகுந்து விளங்குவதால்; வெண்மை இல்லை- வெள்ளறிவாகிய
அறியாமை இல்லை.
கோசலை நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால் வண்மையின்
சிறப்புத் தெரிவதில்லை; பகைகொண்டு போர்புரிபவர் இல்லாதலால்
உடல் வலிமையை உணர வழியில்லை; பொய் பேசுவோர்
இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை; கேள்வி
ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை என்றார்.
‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’ (165) என்று
மேலே கூறுவர். 53
