நாட்டுப் படலம் - 82
சொரிவன இவை எனல்
82.
கோதைகள் சொரிவன, குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன, பரு மணி கனகம்;
ஊதைகள் சொரிவன, உறை உறும் அமுதம்;
காதைகள் சொரிவன, செவி நுகர் கனிகள்.
கோதைகள் குளிர் இள நறவம் சொரிவன-மலர் மாலைகள் இனிய
தேனைப் பொழிவனவாம்; பாதைகள் கனகம் சொரிவன -
வணிகத்துக்குரிய கப்பல்கள் பெரிய மணிகளையும், பொன்னையும்
கொண்டு வந்து குவிப்பனவாம்; ஊதைகள் உறையுறும் அமுதும்
சொரிவன- காற்று உயிர்காக்கும் அமுதத் துளிகளைச் சொரிவனவாம்;
காதைகள் செவிநுகர் கனிகள் சொரிவன- கவிஞர்களின் காப்பியங்கள்
செவிக்கினிய பாடல்களைத் தருவனவாம்.
மக்கள் அணியும் மலர் மாலைகள் தேனையும், கப்பல்கள், மணி,
பொன் ஆகியவைகளையும், காற்று உயிர் காக்கும் அமுதத்
திவலைகளையும் காப்பியங்கள் இனிய பாக்களையும் சொரிவனவாம்
என்பது கருத்து. பாதைகள்: காலினும் கலத்தினும் உறை: துளி
கவியின்பம் செவியால் நுகரப்படுவதாதலின் ‘செவி நுகர் கனி”
என்றார். கோதை: பெண்கள் கூந்தல் என்பதால். கூந்தலின் அணிந்த
மலர் மாலை தேன் சொரியும் என்றும் பொருள் கூறலாம். சத்துருக்கள்
உரையில் மாண்பினை செவிப் புலம் நுகர்வதோர் தெய்வத்
தேன்கொலாம் (2266) என்று குறிப்பது இங்கு ஒப்பிடத்தக்கது. 51
