நாட்டுப் படலம் - 77

bookmark

‘நிகர்வன‘ இவை எனல்

77.

காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம்.
 
காரொடு   நிகர்வன கடிபொழில்- மேகங்களுடன்  அந்தநாட்டுச்
சோலைகள் ஒப்பனவாகும்; கழனிப் போரொடு நிகர்வன புணர்மலை-
வயல்களிலே    குவித்து   வைத்துள்ள   நெற்போருடன்   நெருங்கிய
மலைகள் ஒப்பனவாகும்; அணை சூழ் நீரொடு நிகர்வன நிறை கடல்-
அணைகளில்   தேங்கிய   நீர்த்தேக்கத்துடன்   நீர்  நிறைந்த   கடல்
ஒப்பதாகும்; நிதிசால் ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்-செல்வம்
மிக்க அந்த நாட்டு ஊர்களோடு தேவர் உலகு ஒப்பதாகும்.

அந்த     நாட்டுச் சோலைகள் மேகங்களை ஒத்தும், நெற் போர்கள்
மலைகளை   ஒத்தும்,   நீர்த்தேக்கங்கள்  கடலை  ஒத்தும்    ஊர்கள்
எல்லாம்   தேவர்   உலகை   ஒத்தும்  இருந்தன  என்பது    கருத்து.
புணர்மலை: மலைத்தொடர்ச்சி.                                46