நாட்டுப் படலம் - 78

bookmark

நெய்தல் வளம்

78.

நெல் மலை அல்லன் - நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன் - தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன் - நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன் - மணி படு புளினம்.
 
நெல்மலை    அல்லன  - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத
இடங்களில்;   நிரைவரு   தரளம்-   வரிசை   வரிசையாக   முத்துக்
குவியல்கள்  காணப்படும்;   சொல்மலை  அல்லன-  சொன்ன  அந்த
முத்துக்  குவியல்கள் இல்லாத  இடங்களில்;  தொடுகடல்  அமிர்தம்-
தோண்டப்பட்ட  கடலில் எடுத்த   உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்;
நன்மலை  அல்லன- அந்த உப்புக் குவியல்கள்  இல்லாத இடங்களில்;
நதிதரு  நிதியம்-  நதிகளால்  கொண்டுவந்து  குவிக்கப்பட்ட  பொன்
முதலிய  பொற்  குவியல்களில்  பல  இடங்களில்; மணிபடு புளினம்-
மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.

கோசல   நாட்டில் நெல்லும், முத்தும், உப்பும், பொன்னும், மணியும்
எங்கும்  குவிந்து  மலைகளைப்  போல  மண்டிக்  கிடந்தன   என்பது
கருத்து. புளினம்: மணல் திட்டு.                               47