நாட்டுப் படலம் - 75
நகுவன இவை எனல்
75.
விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை; கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.
வனிதையர் அயல் விழி - அந்நாட்டுப் பெண்களின் வேல் போன்ற
கண்கள்; விதியினை நகுவன- நான்முகனைப் பழிப்பன; அவர் நடை
பிடியின் கதியினை நகுவன- அவர்களது நடை பெண் யானைகளின்
நடையைப் பழிப்பன; புணர் முலை கமலப் பொதியினை நகுவன -
அப்பெண்களின் இணைந்துள்ள மார்புகள் தாமரை அரும்புகளைப்
பழிப்பன; வதனம் கலைவாழ் மதியினை நகுவன- அவர்களது
முகங்கள் கலைகளை உடைய சந்திரனைப் பழிப்பனவாகும்.
பெண்களின் விழிக்கு வேலும், நடைக்குப் பெண்யானை நடையும்,
தனங்களுக்குத் தாமரை அரும்பும், முகத்துக்குச் சந்திரனும்
உவமைகளாகச் சொல்லப்படுவன. இங்கு வேல் முதலியவை விழி
முதலியவைகளைவிட விஞ்சியிருப்பதால் அவைகளை நகுவனவாயின
என்றது; எதிர்நிலையணியாம்.
படைத்த நான்முகனே மயங்கவல்ல விழிகளாதலின் தமக்கு நிகராகா
(நான்முகனை) கண்கள் பழிப்பனவாம். மலர்வதும் குவிவதுமான
தாமரை முகையைப் போலல்லாது என்றும் ஒரு தனிமையாய்
இருக்கும் தனங்கள் தாமரை முகைகளைப் பழித்தன. தேய்தலும்
வளர்தலுமாக உள்ள மதி - என்றும் மலர்ந்தே உள்ள முகத்துக்கு
நிகராகா தாதலின் மதியை முகம் பழிப்பன வாயின என்று கூறியதன்
நயம் உணர்ந்து மகிழ்தற்குரியது. 44
