நாட்டுப் படலம் - 65
65.
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும்-குரவை, கடைசியர்,
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
சென்று இசைக்கும்-நுளைச்சியர் செவ்வழி.
கடைசியர் குரவை - மருத நில மாதர்களின் குரவைக் கூத்துப்
பாடல்; கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்-
கொன்றையாலும் மூங்கிலாலும் ஆகிய குழல்களை உடைய
இடையர்களின் வீட்டு முற்றங்களில்; கன்று உறக்கும்- கன்றுகளை
உறங்கச் செய்யும்; நுளைச்சியர் செவ்வழி- நெய்தல் நில மகளிர்
பாடும் செவ்வழிப் பண் கொண்ட பாடல்; புன் தலைப் புனம்-
சிற்றிடம் கொண்ட புனங்களிலும்; காப்புடைப் பொங்கரில்- காவல்
உடைய சோலைகளிலும்; சென்று இசைக்கும்- பரந்து சென்று
ஒலிக்கும்.
கொன்றைக் கனியையும் மூங்கிலையும் துருவித் துளையிட்டுக் குழல்
செய்வர். உறக்கும்-உறங்கச் செய்யும். செவ்வழிப் பண் காலை
நேரத்துக்கு உரியது.
முல்லையும் (கொன்றை) மருதமும் (கடைசியர்) நெய்தலும்
(நுளைச்சியர்) கலந்த திணை மயக்கம். முன்றில்-இல்முன் என்தன்
போலி. உறக்கும்-பிறவினை. 34
