நாட்டுப் படலம் - 50

bookmark

விருந்தோம்புதலும் - சுற்றமருந்துதலும்

கடல்வாணிகம்
 
50.

முறை அறிந்து, அவாவை நீக்கி,
   முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து, உயிர்க்கு நல்கும், இசை
   கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்த்து உயிர்க்கும் தெய்வப்
   பூதலம்தன்னில், பொன்னின்
நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடு
   முதுகு ஆற்றும், நெய்தல்.
 
முறை   அறிந்து- ஆளும் முறையை அறிந்து; அவாவை நீக்கி-
ஆசையை  அகற்றி;  முனிவுழி முனிந்து- கோபிக வேண்டிய போதில்
கோபித்து;   வெஃகும்  இறை  அறிந்து-  தான்  விரும்பும்  வரியின்
அளவை  அறிந்து;  உயிர்க்கு  நல்கும்-  தன்  குடிகளுக்கு இரங்கும்;
இசைகெழு வேந்தன் காக்க- புகழ் அமைந்த மன்னன் பாதுகாப்பதால்;
பொறை  தவிர்த்து-  (பாவமாகிய)  சுமை  நீங்கப் பெற்று; உயிர்க்கும்
தெய்வப்    பூதலம்தன்னில்   -   (அமைதியாகிய)    இளைப்பாறு
கின்ற தய்வத்  தன்மை  வாய்ந்த  நிலம்  போலே; பொன்னின் நிறை
பரம்  நெய்தல்  சொரிந்து- பொன்னாகிய நிறைந்த பாரத்தை நெய்தல்
நிலத்திலே இறக்கிவிட்டு;  வங்கம்  நெடுமுதுகு  ஆற்றும்- கப்பல்கள்
நீண்ட முதுகுகளை ஆற்றிக் கொள்ளும்.

மன்னன்     முறை  அறிந்து   உயிர்க்கு நல்குவோனாக அமைந்து
பொறுப்பை    ஏற்றிருப்பதால்  நிலமகள்  தன்  சுமை இறக்கி நிம்மதிப்
பெருமூச்சு   விடுகிறாள்.    கப்பல்கள்  ஏற்றிவந்த  சுமையை  நெய்தக்
நிலத்தில்   இறக்கிவிட்டு    நெடுமுதுகு  ஆற்றுகின்றன.  உவமையணி.
முறை;  அரச   நெறி. இறை; ஆறில் ஒரு பங்கு வரி; பழங்கால வழக்கு
இது. பரம்-பாரம் என்பதம் குறுக்கல் விகாரம்.                    19