நாட்டுப் படலம் - 43
மைந்தர் கூட்டம்
43.
வென் தளக் கலவைச் சேறும்,
குங்கும விரை மென் சாந்தும்,
குண்டலக் கோல மைந்தர் குடைந்த,
நீர்க் கொள்ளை, சாற்றின்,
தண்டலைப் பரப்பும், சாலி
வேலியும் தழீஇய வைப்பும்,
வண்டல் இட்டு ஓடு மண்ணும் -
மதுகரம் மொய்க்கும் மாதோ.
வெண்தளக் கலைச் சேறும்- பச்சைக் கற்பூரம் கலந்த சாந்தும்;
குங்கும விரை மென் சாந்தும்- குங்குமப் பூ முதலியன கலந்த
சந்தனமும் பூசிய; குண்டலக் கோல மைந்தர்- குண்டலம் அணிந்த
அழகிய ஆண்கள்; குடைந்த நீர்க் கொள்ளை- முழுகி நீராடிய அந்த
வெள்ளப் பெருக்கை; சாற்றின்- சொல்லுவதாயின்; தண்டலைப்
பரப்பும்- சோலைப் பரப்புகளிலும்; சாலி வேலியும்- நெற்பயிர்
விளையும் வயல்களிலும்; தழீஇய வைப்பும்- அவற்றைச் சார்ந்துள்ள
நிலப் பகுதிகளிலும்; வண்டல் இட்டு ஓடும் மண்ணும்- வண்டல்
படியும்படி (நீர்) ஓடும் ஏனைய மண் பகுதிகளிலும்; மது கரம்
மொய்க்கும்- வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.
ஆடவர் பூசிய நறுமணக் குழம்பும் சாந்தும் கொண்ட எங்கணும்
பரவியிருப்பதால், மணத்தின் வழியே சென்று தேன் நாடும் வண்டுகள்
பல இடங்களிலும் மொய்த்துக் கிடந்தன. அவை மணம்
நுகர்ந்தனவேயன்றித் தேன் காணவில்லை. வெண்டாளம்: பச்சைக்
கருப்பூரம் தழீஇய-சொல்லின் அளபெடை. 12
