நகர் நீங்கு படலம் - 1917
சீதையின் மாற்றம்
சீதை தன் மன ஆற்றலை உரைத்தல்
1917.
‘பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்.
‘பரிவுஇகந்த மனத்து ஒரு பற்று இலாது - இரக்கம் அற்ற
மனத்தில் ஒரு சிறிதும்விருப்பம் இல்லாமல்; ஒருவுகின்றனை- என்னை
விட்டு விலகிச் செல்கின்றாய்; ஊழி அருக்கனும் -பிரளய காலத்துச்
சூரியனும்; எரியும் என்பது - கடுவான்என்பது; யாண்டையது? -
எவ்விடத்துள்ளது? ஈண்டு - இவ்விடத்து (என்திறத்தில்); நின்
பிரிவினும் -உன் பிரிவு சுடுவதைக் காட்டிலும்; பெருங்காடு-
உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு; சுடுமோ?’- என்னைச்
சுடுமோ;’ என்றாள் -.
உன்னால் வரும் பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச்
சூரிய வெப்பமும்நிகராகாது; எனவே, ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’
என்றாள். ‘பெருங்காடு இன்னாஎன்றீராயின். இனியவோ பெரும
தமியேற்கு மனையே’ (குறுந். 124) என்பதும் காண்க. 222
