நகர் நீங்கு படலம் - 1916
இராமன் விடை
இராமன் ‘இருத்தி’ என்றதன் காரணம் கூறல்
1916.
‘வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்லல - நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது’ என்றான்.
(இராமன்) ‘நின் - (சீதையே!) உனது; சில் அரக்கு உண்ட -
குளிர்ந்தசெம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற; சேவடிப் போது - சிவந்த
அடிமலர்கள்; வல்அரக்கரின் - கொடிய அரக்கர் போலத் (தோன்றும்);
மால் வரை - பெரியமலையில்; போய் விழுந்து - சென்று பரவி; அல்-
இரவிலும்; அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் - அரக்கினை
உருக்கினாற்போல வெப்பத்தைச்செய்கின்ற காட்டு வழியில் உள்ள; கல் -
கற்கள்; அரக்கும் -உராய்கின்ற; கடுமைய அல்ல’ - கடுமையுடையன
அல்ல;’ என்றான் -.
மலைவழி, காட்டுவழி, இரவிலும் வெப்பம் செய்யும் வழி, கூரிய
கற்கள் உற்ற வழி எனவேவெப்பமான - கூர்ங்கற்கள் உராய்வதனால்
ஏற்படும் வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன் பாதம்;
குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய மலரனைய பாதம்.
அதனால்தான்.‘இருத்தி’ என்றேனே அன்றி உன்னைப் பிரிதல்
வல்லமையால் சொன்னேன் என்று கருதாதேஎன்பது போல இராமன்
கூறினான். 221
