நகர் நீங்கு படலம் - 1915
சீதை வினவுதல்
1915.
அன்ன தன்மையள், ‘ஐயனும், அன்னையும்,
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;
என்னை, என்னை, “இருத்தி” என்றான்?’ எனா,
உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள்.
அன்னதன்மையள் - அத்தகைய இயல்பினை உடைய சிதை;
‘ஐயனும் அன்னையும்சொன்ன- தந்தையும் தாயும்இட்ட கட்டளைகளை;
செய்யத் துணிந்தது தூயதே -நடந்த முடிவு செய்தது தூய்மை
உடையதே (ஆயினும்); என்னை-; என்னை இருத்தி என்றான்?’-
எதனால் அரண்மனையிலேயே இரு என்று சொன்னான்;எனா-என்று;
உன்னி உன்னி - நினைத்து நினைத்து; உயிர்உமிழா நின்றாள்
- உயிர் துடிப்ப இருந்தாள்.
குரவர் சொல் கேட்டல் அறமே ஆயினும் கொண்ட மனைவியைப்
பிரிதல் எதனால் என்றுஅறியாது வருந்துவன் ஆயினாள்.
பாற்கடலிலிருந்து பிரியாமல் அயோத்தி வரை உடன்வந்தவள்,
அயோத்தியிலிருந்து அருகில் உள்ள வனம் போகாமல் தடுக்கப்பெறுவது
கண்டுவருந்தினாளாம். 220
