நகரப் படலம் - 167
அயோத்தி மாநகரம் தருவை நிகர்க்கும் எனல்
167.
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து. எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கு. அருந் தவத்தின்
சாகம் தழைத்து. அன்பு அரும்பு. தருமம் மலர்ந்து.
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து - கல்வி என்னும் ஒரு
வித்து ஒப்பற்றதாக முளைத்து மேலெழுந்து; எண்ணில் கேள்வி
ஆகும் - எண்ணற்ற பல்நூல் கேள்வியாகிய; முதல் திண்பணை
போக்கி -முதன்மையும். வலிமையும் வாய்ந்த கிளைகளை எங்கும்
பரவச் செய்து; அரும் தவத்தின் சாகம் தழைத்து - அரிய தவமாகிய
இலைகள் தழைத்து; அன்பு அரும்பி - எல்லா உயிர்களிடமும்
செலுத்தும் அன்பாகிய அரும்பு அரும்பி; தருமம் மலர்ந்து- அறச்
செயல்களாகிய மலர்கள் மலர்ந்து; போகம் கவி ஒன்று - இன்ப
அநுபவம் என்னும் பழத்தை; பழுத்தது போலும் - பழுத்த பழ
மரத்தைப் போன்று (அந்த அயோத்தி மாநகர்) பொலிந்து விளங்கியது.
அயோத்தியின் சிறப்பைக் கூறும் இப்பாடல் முற்றுருவகம்.
கல்வியால் அடக்கம்; அடக்கத்தால் நல்வாழ்வு - நல்வாழ்வால்
பொருள்- அற வழியே பெற்ற பொருளால் அறம். அவ்வறத்தால்
இன்ப அநுபவம் கிடைக்கும் என்பதனை நயம்படக் கூறும் பாட்டு
இது எனலாம். 75
