அரசியற் படலம் - 168
அயோத்தி அரசனுடைய சிறப்பியல்புகள் (168-172)
168.
அம் மாண்நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன்-தரு நல் அற மூர்த்தி அன்னாங்
அம்மாண் நகருக்கு அரசன் - அத்தகைய மாண்பு மிகுந்த
நகரத்துக்கு அரசனாய் இருப்பவன்; அரசர்க்கு அரசன்- மன்னர்களுக்
கெல்லாம் மன்னனான சக்கரவர்த்தி; மாண் தனிக் கோல்- மாட்சிமை
மிக்க தனது ஒப்பில்லாத செங்கோலாகிய ஆட்சிமுறை; உலகு ஏழினும்
செல்ல நின்றான்- ஏழு உலகங்களிலும் செல்லுமாறு ஆட்சி செய்து
நிலைத்தவனாவான். மேலும் அவன்; இம்மாண் கதைக்கு ஓர்
இறையாய- இந்தப் பெருமைபொருந்திய இராமாயணம் என்னும்
கதைக்குத் தலைவனான; இராமன் என்னும் மொய்மாண்
கழலோன்தரு - இராமன் என்ற பெயரை உடைய வன்மையும்
பெருமையும் உள்ள வீரக்கழல் அணிந்தநம்பியைப் பெற்ற; அன்னான்
நல்லற மூர்த்தி - நல்லறத்தின் வடிவமுமாவான்.
‘அம்மாண்நகர்’ என்பதிலுள்ள அகரச்சுட்டு. நகரப்படலத்தில் கூறிய
பெருமையை எல்லாம் குறித்து நின்றது. ‘தனி’: தயரதனது ஒப்பற்ற
ஆட்சியை உணர்த்தும் ‘கோல்’: நல்லாட்சியைக் குறிக்கும் ஒரு மரபுச்
சொல். இவ் வேந்தனது ஆணை எவ்வுலகினிலும் செல்லும்
என்பதனை ‘உலகேழினும் செல்ல’ என்றார். இறை: தலைவன். மெய்:
வலிமை. ராமன்: அழகன் என்ற பொருள் உடையச் சொல்லாகும்.
மூர்த்தி: உருவம் (வடிவம்). நல்லறமே திரண்டு ஓர் வடிவானவன்
என்பது பொருள். 1
