நகரப் படலம் - 147

bookmark

யானையின் மதநீரால் பூமி குழைதல்

147.

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும், மண்ணும் கீழ் உறக்
குழை விழும்; அதில் விழும், கொடித் திண் தேர்களே.
 
தழல்விழி ஆளியும் துணையும்-  நெருப்பென விழிக்கும் கண்களை
உடைய     ஆண்   சிங்கங்களும்   துணையான  பெண்சிங்கங்களும்;
தாழ்வரை   முழை   விழை-   தங்குவதற்கு  ஏற்றனவாகிய  மலைக்
குகைகளை விரும்பும்; கிரி  நிகர்  களிற்றின்  மும்மத மழைவிழும்-
மலை போன்ற  யானைகளின் மதநீர் மழை பொழியும்; விழும் தொறும்
மண்ணும்  கீழ்உற குழை விழும்- அவ்வாறு மழை சொரியும் தோறும்
நிலமும்  ஆழமாகுமாறு  சேறாகும்;  அதில்  கொடித்திண்  தேர்கள்
விழும்-    அந்தச்  சேற்றில் கொடிகளை உடைய வலிய தேர்கள் புதை
யுண்ணும்

நெருப்பெழும்       விழிகொண்ட   ஆண்   சிங்கமும்    அதன்
பெண்சிங்கமும்    தங்குவதற்கு  ஏற்ற குகைகள் கொண்டது அம் மலை;
அந்த   மலைபோன்ற    யானைகளின்   மும்மதமும்  மழை  போலப்
பொழிவதால்  மண்ணொடு  கலங்கித் தரை சேறாகும்; அந்தச் சேற்றிலே
தேர்கள்  புதையுண்ணும்.   இப்பாடலின்   செய்தி  இது.  ‘தழல்  விழி
ஆளியும் துணையும் தாழ்வரை மழை விழை’   என்றநீண்ட   தொடர்
கிரிக்கு  அடை, தாழ்தல்:  தங்குதல்,  மும்மதம்: கன்ன மதம், கபோல
மதம், பீஜ மதம்.                                           55