நகரப் படலம் - 148
மாலை கலவைச்சாந்து இவற்றின் மிகுதி
148.
ஆடு வார் புரவியின் குரத்தை ஆர்ப்பன,
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவது, ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன உலை கொழித்த சாந்தமே.
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்- மாலை
சூடிய மகளிர் (வாடிவிட்டன என்று) இகழ்ந்து எறிந்துவிட்ட
மாலைகள்; ஆடுவார் புரவியின் குரத்தை ஆர்ப்பன- ஆடுகின்ற
நெடிய குதிரைகளின் குளம்புகளைப் பிணிப்பனவாகும்; ஊடல் ஊடு
உறக் கூடுவார் - புலவி இடையிலே நிகழ, பின் ஆடவருடன் கூடி
மகிழும் மகளிர்; வனமுலை கொழித்த சாந்தம் - அழகிய
தனங்களிலிருந்து வழித்து வீதியில் எறிந்த சந்தனத் தேய்வை; ஓடுவார்
இழுக்குவது - அத்தெருவில் ஓடுபவர்களை வழுக்கி விழச்
செய்வனவாம்.
மகளிர் தாம் அணிந்த மாலைகள் வாடினவென வீசியெறிய அவை
குதிரைகளின் கால்களைப் பிணிக்கும். அம்மகளிர் வழித்து எறிந்த
சந்தனக் குழம்பு வீதியில் ஓடுபவர்களை வழுக்கி விழச் செய்யும்.
குரம்: குளம்பு ஆர்த்தல்: பிணித்தல் (கட்டுதல்). “கோதை மடவார்தம்
கொங்கை மிசை திமிர்ந்த சீதக் களபச் செழுஞ் சேற்றால் வீதிவாய்
மானக்கரி வழுக்கும்” என்ற நளவெண்பா ஒப்பு நோக்கத்தக்கது (1: 13)
56
