நகரப் படலம் - 145

bookmark

மதங்கியர் அழகின் மாட்சி

மகிழ்ச்சிப் புலப்பாடு
 
145.

முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந் துயர்
விளைப்பன; அன்றியும், மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண் இடை; இளைப்ப, மென் முலை
திளைப்பன, முத்தொடு செம் பொன் ஆரமே.
 
முளைப்பன     முறுவல் - அந்நகரத்துப் பெண்களின் முகத்திலே
எப்போதும்   புன்சிரிப்பு   தொன்றுவன;   அம்முறுவல்   வெந்துயர்
விளைப்பன-  அந்த  புன்சிரிப்பு,   அப்பெண்கள்பால் காதல் கொண்ட
ஆடவர்க்குக்  கொடிய  துன்பத்தை   உண்டாக்கும்;  அன்றியும் நுண்
இடை-   அல்லாது,   அம்மகளிரின்    சிறிய   இடைகள்;  மெலிந்து
நாள்தோறும்  இளைப்பன-  நாள்தோறும்  மெலிந்து இளைப்பனவாம்;
நுண்  இடை  இளைப்ப- அவர்களது  மெல்லிடை இவ்வாறு இளைக்க;
மென்முலை    முத்தொடு செம்பொன்    ஆரமே   திளைப்பன-
அம்மகளிரது  மென்மையான  தனங்கள்  முத்து வடங்களும் பொன்னரி
மாலைகளும் பூண்டு திளைப்பனவாகும்.

பெண்களின்   புன்முறுவல்   -     அவர்கள்பால்  காதல்கொண்ட
ஆண்களின்  காதல்  நோயை மிகுவிக்கும் பெண்களின் இடை மெலிவது
கண்டு,   அவர்களது   கொங்கைகள்   அவ்விடை  மேலும்  மெலிந்து
வருந்துமாறு.   முத்து   மாலைகளையும்,  பொன் அணிகளையும் பூண்டு
மகிழ்கின்றன   என்கிறார்.   இதனால்  ஒருவர்  வருந்த,  மற்றொருவர்
மகிழும் உலக இயற்கை கூறப்படுகின்றது. வெந்துயர்:  கொடிய   துன்பம்
(இங்குக்    காம    வேதனை).  இதுமுதல்  13  பாடல்களில்  அந்நகர
மாந்தரின் மகிழ்ச்சி கூறப்படும்.                                53