நகரப் படலம் - 144
ஆடற்சதியை அளந்து காட்டுவன
குதிரைகளின் கிண் கிணி மாலை
பாடினி பாட. விறலின் ஆட
144.
பதங்களில் தண்ணுமை, பாணி, பண் உற
விதங்களின், விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள்; அல்லன புரவித் தார்களே.
தண்ணுமை, பாணி, பண், உற- மத்தள ஒலி, தாள ஓசை, பாட்டு
ஒலி இவைகளுக்குப் பொருந்த; விதிமுறை விதங்களின்- நாட்டிய
நூல்முறைப்படி பல விதங்களாக; பதங்களில் சதிமிதிப்பவர்-
பாதங்களால் சதிபெற வைத்து நடனம் ஆடுபவர்கள்; மதங்கியர்-
ஆடல் பாடல்வல்ல பெண்கள் ஆவர்; அச் சதி வகுத்துக்காட்டுவ-
அந்தத் தாளச் சதியை விவரித்துக் காட்டுபவை; சதங்கைகள்-
அப்பெண்கள் கால்களில் அணிந்துள்ள சதங்கைகளும்; அல்லன
புரவித்தாள்களே- அவ்வாறு ஆடுகின்ற குதிரைகளின் கால்களுமே.
அந்த நகரத்துப் பெண்களின் நாட்டியச் சிறப்பும், குதிரைகளின்
ஆட்டச் சிறப்பும் கூறப்பட்டன. குதிரை தாளத்துக்கேற்ப ஆடும்
என்பதை மேலே (751) எழுச்சிப் படலத்திலும் கூறுவார். பதங்கள்:
பாதங்கள். தண்ணுமை: மத்தளம். பாணி: கைத்தலம். சதி: தாளஒத்து.
மதங்கியர்: ஆடு மகளிர். 52
