நகரப் படலம் - 135

bookmark

அயோத்தியில் உள்ள மகளிர் குதலை
முதலியவற்றின் இயல்பு

ஆடல் பாடல் முதலிய விளையாட்டுகள்
 
135.

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை, -அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன்சொல் இன் இசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.
 
குழலிசை    மட்சந்தையர் குதலை- கூந்தல் வாரி முடிக்கமுடியாத
நிலையில்  உள்ள  இளம் பெண்களின் குதலைச் சொற்கள்; அம் குழல்
இசை-  அழகிய   குழலோசையை  ஒத்திருக்கும்; கோதையர் மழலை-
மங்கைப்பருவ  மகளிரின்     மழலை மொழிகள்; மகர யாழிசை- மகர
யாழின்    இசையை   ஒத்திருக்கும்; எழிலிசை  மடந்தையர்- வனப்பு
பொருந்திய  பெண்களது; இன்சொல் இன் இசை- இனிய சொற்களாகிய
இன்னிசை;    பழையர்தம்  சேரியில்-  கள்  விற்கும்  பழையர்களின்
சேரியிலே;   பொருநர்  பாட்டுஇசை-  கூத்தர்கள்  பாடும்  இசையை
ஒத்திருக்கும்.

பருவம்     நிரம்பாதவர்கள்   பருவ  மங்கையர் பருவ முதிர்ந்தவர்
எனப்  பெண்களை  மூவகைப்படுத்தி   அவர்களின் பேச்சுக்கு உவமை
கூறினார்.  குதலை: வடிவச் செம்மை   பெறாத சொல். இது முதல் ஆறு
பாடல்கள்.  ஆடல் பாடல் முதலிய   விளையாடல்களைக் கூறுவனவாம்.
                                                         43