நகரப் படலம் - 136
யானைகள் செய்த குழிகளைச் சுண்ணம் தூர்க்கின்றது எனல்
136.
கண்ணிடைக் கனல் சொரி களிறு, கால் கொடு
மண்ணிடை வெட்டுவ; வேட்கை மைந்தர்தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன;
சுண்ணம்அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன.
கண்ணிடைக் கனல் சொரி களிறு- (கோபத்தால்) கண்களிலே
நெருப்பைச் சொரியும் ஆண்யானைகள்; கால் கொடு மண்ணிடை
வெட்டுவ- கால்களால் நிலத்தை வெட்டுவனவாம்; வேட்கை
மைந்தர்தம்- பார்ப்பவர் விரும்பும் அழகிய இளைஞர்களின்;
பண்ணைகள் பயில் இடம்- விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள்;
குழி படைப்பன- குழிகளை உடையனவாம்; அக்குழிகளைச் சுண்ணம்
தொடர்ந்து தூர்பன- அந்தக் குழிகளை அவ்விளைஞர் அணிந்த
வாசனைப் பொடிகள் தூர்ப்பனவாகும்.
இளங் குமரர்கள் யானைகளை உடன் கொண்டு சென்று
விளையாடுவர். அந்த யானைகள் நிலத்தைக் காலால் வெட்டி குழி
செய்கின்றன. அக் குழிகள் வாசனைப் பொடிகளால்
தூர்க்கப்படுகின்றனவாம்.
