நகரப் படலம் - 128

bookmark

மாளிகைகளிற் சூலங்கள் மின்வரிசைபோலுதல்

கொடிகளின் காட்சி
 
128.

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின,
முகிலொடு வேற்றுமை தெரிகலா, முழுத்
துகிலொடும் நெடுங் கொடிச் சூலம் மின்னுவ;-
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே.
 
அகில்   இடு கொழும்  புகை   அளாய்  மயங்கின-  அகிலின்
செழுமையான  புகை  மாளிகை   எங்கும் கலந்தவைகளாய்; முகிலொடு
வேற்றுமை   தெரிகலா-  மேகத்துடன்  வேற்றுமை  அறிய  முடியாத;
முழுத்துகிலொடு-  பெரிய   கொடிகளுடன்;   நெடுங்கொடிச்  சூலம்
மின்னுவ- நீண்ட  கொடி  மரங்களின் நுனியில் நாட்டப்பட்ட சூலங்கள்
ஒளிர்பவை; பகல்  இடு  மின்  அணிப் பரப்புப்போன்ற- ஒளி வீசும்
மின்னல் வரிசையின் பரப்பை ஒத்திருந்தன.

அகிற்     புகையுடன்  கலந்த கொடிகள் மேகத்தை ஒத்தும், அவை
கட்டப்பட்ட   கொடி   மரத்தின்     நுனியில்  பொருந்திய  சூலங்கள்
மின்னுவது  மின்னலை  ஒத்தும்    காணப்பட்டன. தற்குறிப்பேற்றவணி.
மின்   அணி:   மின்னல்   வரிசை,     மாளிகைகளில்   இடிதாங்கும்
பொருட்டும் அழகுக்காகவும் சூலம் பொருத்துவர் ஒப்பு:   திருச்சிற். 222
                                                        36