நகரப் படலம் - 129

bookmark

கொடிச்சரங்கள் கற்பகமாலையை ஒத்தல்

129.

துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
கொடியிடை தரள வெண் கோவை சூழ்வன;-
கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே.
 
துடி  இணைப் பணை முலை - உடுக்கை போன்ற இடையினையும்
பருத்த  தனங்களையும் உடைய; தோகை அன்னவர்- மயில்   போன்ற
சாயலை  உடைய மகளிர்; அடியிணைச் சிலம்பு பூண்டு- தங்கள்  இரு
கால்களிலும்   சிலம்பு   அணிந்து;   அரற்றும்   மாளிகை-  அவை
ஒலிக்கும்படி   நடக்கும்   மாளிகைகளிலே;  கொடியிடைத்தரளவெண்
கோவை சூழ்வன- கொடிகளுக்கு இடையில் முத்து மாலைகள்  தொங்க
விடப்பட்டுள்ளவை;  கழி  உடை   கற்பகம்   கான்ற   மாலையே-
மணம்மிக்க கற்பக மரங்களில் பூத்த மாலைகளை ஒத்திருந்தன.

மாளிகையின்     கொடிகளிலே தொங்கவிடப்பட்ட  முத்துமாலைகள்,
கற்பக   மரத்தில்   உள்ள   பூமாலைகளை  ஒக்கும்  என்றார்.   இது
காட்சியணி.   இனி  “கொடியிடைத்  தரள  வெண்  கோவை   (அந்த
மாளிகைளின்   உயர   மிகுதியில்)  கற்பக  மரத்தின்    மாலைகளைச்
சூழ்வன”  என்பது  பொருந்தும்.  கடியுடைக்  கற்பகம்    என்பதற்குக்
கற்பகச் சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.                 37