நகரப் படலம் - 127
மாளிகைகள் மலைகளை ஒத்திருத்தல்
127.
அருவியின் தாழ்ந்து, முத்து அலங்கு தாமத்த;
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின;
பரு மணிக் குவையன; பசும் பொன் கோடிய;
பொரு மயில் கணத்தன;- மலையும் போன்றன.
அருவியின் தாழ்ந்து - (அம்மாளிகைகள்) நீர் அருவி போலத்
தாழ்ந்து; அலங்கு முத்து தாமத்த- அசையும் முத்து மாலைகளை
உடையவை; விரி முகில் குலம்என- பரந்த மேகக் கூட்டத்தை ஒத்த;
கொடி வீராயின- கொடிகள் பரவியுள்ளவை; பருமணிக் குவையன-
பெரிய மணிகளின் குவியல்களை உடையன; பசும்பொன் கோடிய-
பசும்பொன் குவைகளை உடையன; பொரு மயிற்கணத்தன-
வடிவொத்த மயில்களை உடையன.
‘பொரு மயில் கணத்தன’ என்பதற்கு உருவ அழகால் ஒத்த மயில்
போன்ற மகளிர் கூட்டத்தை உடையவை என்பதும் பொருத்தமான
பொருளாம்.
மலையும் போன்றுள்ள: மலையைப் போலவும் இருப்ப. அருவியும்,
முகிலும், மணியும், பொன்னும், மயிலும் மலையில் உள்ள
பொருள்களாகும். அருவி போன்ற முத்து மாலைகளும்
பன்மணித்திரள் பொன்குவயல்- ஆகியனவும் மாளிகைகளில்
இருப்பதால் மலையை ஒத்திருந்தன என்கிறார். அலங்குதல்:
அசைதல்: தாமதம்: மாலை: பருமணி: பருத்த மணிகள்: கணம்:
கூட்டம். 35
