தைலம் ஆட்டு படலம் - 2002
வசிட்டமுனிவன் வந்து வருந்துதல் (2002-2003)
சுமந்திரனால் செய்தி அறிந்து வசிட்டன் வந்து வருந்தல்
2002.
மாதரார்கள் அறுபதினாயிரரும்
உள்ளம் வலித்து இருப்ப,
கோது இல் குணத்துக் கோசலையும்
இளைய மாதும் குழைந்து ஏங்க,
சோதி மணித் தேர்ச் சுமந்திரன்
சென்று, அரசன் தன்மை சொல, வந்த
வேத முனிவன், விதி செய்த
வினையை நோக்கி விம்முவான்.
மாதரார்கள் அறுபதினாயிரரும் - (தசரதன்) மனைவியராய
அறுபதினாயிரம்தேவிமார்களும்; உள்ளம் வலித்து இருப்ப - உடன்
கட்டை ஏறுவது என்று மனத்தில் உறுதி செய்துகொண்டு இருக்க;
கோது இல் குணத்துக் கோசலையும் இளையமாதும் குழைந்து ஏங்க-
குற்றமற்ற குணத்தை உடைய கோசலாதேவியும், சுமித்திராதேவியும் மனம்
இளகி வாட;(இந்நிலையில்) சோதி மணித்தேர்ச் சுமந்திரன்சென்று -
ஒளியை உடைய மணிகள்கட்டப்பட்ட தேரை உடைய சுமந்திரன் போய்;
அரசன் தன்மை சொல - தயரதன் இறப்பைத்தெரிவிக்க; வந்த வேத
முனிவன் - அங்கே வந்த வசிட்ட முனிவன்; விதி செய்தவினையை
நோக்கி - ஊழ்வினை செய்த செயலை உள்ளத்தாலும் கண்ணாலும் நோக்கி;
விம்முவான் - வருந்துவான் ஆனான்.
அரசன் துடிக்கும் காட்சியைக் காணச் சகியாமல் அப்பால் சென்ற
வசிட்டன் சுமந்திரனால்செய்தி அறிந்து வந்து வருந்தினன். 73
