தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த வந்த பாண்டியர் அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர். பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் தென்காசியையே தலைநகராகக் கொண்டு தென்காசி பெரியகோயிலில் உள்ள சிவந்த பாதவூருடைய ஆதீன மடத்தில் முடி சூட்டிக்கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. தென்காசிப் பாண்டியர்களில் கொல்லங்கொண்டான் என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.
மதுரையை பாண்டியர் இழந்தது:
விஜயநகரப் பேரரசும் நாயக்கர்களும் 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மதுரையை ஆண்டிருந்தாலும், அவ்வப்போது சில பாண்டியர்கள் இவர்களை எதிர்த்தும் வந்தனர். சில நேரங்களில் மதுரையையும் ஆண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சடையவர்மன் விக்கிரம பாண்டியனும் (கி.பி. 1401 - 1422) அவனின் மகனான அரிகேசரி பராக்கிரம பாண்டியனும் ஆவர். இவர்கள் மதுரையை சுற்றி 32 கோட்டைகளைக் கட்டினர். பின் விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலேசுவரனாக ஆன பின்னர் மீண்டும் பாண்டியர் தனியாட்சி கோருவர் எனப்பயந்து மதுரையை 72 பாளையங்களாகப் பிரித்தான். அதில் பாண்டியர்களுக்கு மிக நெருக்கமானவர்களின் 16 பாளையங்களும் அடங்கும். அவர்களுக்குப் பதவிகள் பல தந்து பாண்டியர்களிடம் அண்டவிடாமல் அவர்களைத் தனியர்களாக்கினான். அதனால் பாண்டியர் மதுரையை நிரந்தரமாக இழக்க வேண்டியதாயிற்று.
செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை:
செண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்குக் கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தைக் கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டது தான் தென்காசி கோபுரம். இந்தக் கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
ஆதாரங்கள்:
பாண்டிய குலோதயம்:
பாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும். அதில் உள்ள தகவல்கள், சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.
அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர். சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னாவான்.
நாணயவியல்:
தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிடப்பட்டன. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான ஆகவராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த நாணயங்களை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.
நகரமைப்பு:
பாண்டியர் கால தென்காசி நகரமைப்பு காசி விசுவநாதராலயத்தை மையமாகக் கொண்டமைந்தது. ஆலயத்தைச் சுற்றி சதுர வடிவில் அடுத்தடுத்து வீதிகளமைந்திருந்தன.
மாசி வீதி : அவை முறையே தெற்கு மாசி வீதி, கீழ மாசி வீதி, வட மாசி வீதி,
மேலமாசி வீதி எனப்படும். இதில் பிராமணர்களே பெரிதுமிருந்தனர்.
வேளாள வீதி : இவற்றில் வேளாண்மை செய்வோர் (மள்ளர்,பிள்ளை) இருந்தனர்.
கோனார்க்குடி : இவற்றில் பால் வியாபாரம் செய்வோர் (ஆயர்) இருந்தனர்.
அரசியல்:
தென்காசி பாண்டியர் உக்கிரன் கோட்டையைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.
இனி தென்காசியை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தென்காசி பாண்டியர்களுள் குறிப்பிடத்தக்கவர்களை காண்போம் வாருங்கள்.
