தென்காசிப் பாண்டியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்
கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்
கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்
கி.பி. 1473-1506
குலசேகர தேவன்
கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன்
கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன்
கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன்
கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்
கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன்
கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன்
கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான்
(தகவல் இல்லை)
மேற்கண்ட இவர்களே தென்காசிப் பாண்டியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்கள் காலத்தில் பேரரசாக இருந்த பாண்டிய அரசு. சிற்றரசு நிலையை விடத் தாழ்ந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கண்டறிந்த உண்மை. மேற்கண்ட அரசர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் காண்போம் வாருங்கள்
(அ) சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி." பூமிசைவனிதை, நாவினில் பொலிய" எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆற்றிய போர்கள்:
திருக்குற்றாலத்தில் சேர மன்னனொருவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என தளவாய் அக்கிரகாரச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலைக்குளம், வீரகேரளம், புதூர் போன்ற ஊர்களில் பலரை வென்றுள்ளான் இம்மன்னன்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆற்றிய அறப்பணிகள்:
விந்தனூர் மற்றும் ஐந்து ஊர்களிற்கு அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.
திருக்குற்றாலம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களிற்கு மண்டபங்கள் அமைத்தான்.
நெல்லை சிவன் கோயிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான் என மெய்க்கீர்த்திகளில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தென்காசி குன்றமன்ன கோயிலைக் கட்டியெழுப்ப உத்தரவிட்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அங்கு பல சிற்பங்களினையும் அமைக்க உத்தரவிட்டான். இவ்வாலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், விழா எடுக்கவும் தேவதானம், இறையிலியாக பல ஊர்களை உதவினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணைய 17 ஆண்டுகள் இக்கோயில் பணிகள் நடைபெற்று கட்டு முடிக்கப்பட்டதென கற்றூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
தென்காசிக் கோயிலில் ஒன்பது நிலைக் கோபுரங்கள் முழுமையானதாகக் கட்டப்படவில்லை ஆனால் இம்மன்னன் தனது பரம்பரையினருக்கு இக்கோபுரங்களை முழுமையானதாகக் கட்டியெழுப்ப ஆணையிட்டான்.
தென்காசிக் கோயிலில் இவன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் எழுதிய பாடல்கள் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலிலேயே பிற்காலத்தில் வந்த பாண்டிய மன்னர்கள் முடிசூட்டிக்கொண்டனர். செங்கோல் ஆட்சியை நடத்திய சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் விசுவநாதப் பேரேரி என்ற பெயருடன் ஒரு ஏரியை அமைத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ஆ) மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429 முதல் 1473 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சடையவர்மன் பராக்கிர பாண்டியனின் தம்பியான இம்மன்னன் தனது சகோதரனின் ஆட்சிக் காலத்தில் நிறைவு செய்யப்படாத நிலைக் கோபுரப் பணிகளினை நிறைவு செய்யததாக தென்காசிக் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(இ) அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவார். இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகனும் ஆவார். புதுக்கோட்டை செப்பேடு இம்மன்னனிற்கு அபிராமபராக்கிரம பாண்டியன், ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது. இவர் காலத்திலேயே குலசேகர தேவன் என்ற பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 வரை ஆட்சி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ஈ) குலசேகர தேவன்
இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டியர்களின் நிலை இன்னும் மோசமாக மாறியது. மக்கள் வறுமையில் வாடினார்கள்.
(உ) சடையவர்மன் சீவல்லப பாண்டியன்
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534 முதல் 1543 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ஆகவராமனின் மகனானான இம்மன்னன் பாண்டியராச்சிய தாபனாசாரியன், இறந்த காலமெடுத்தான் போன்ற பட்டங்களினை உடையவனும் ஆவான். திருவாங்கூர் நாட்டில் உதயமார்த்தாண்டவர்மன் என்ற சேர மன்னன் ஆட்சி செய்து வந்தான் அவன் தென்பாண்டிய நாட்டினை கைப்பற்றினான் இச்சேர மன்னனைப் பற்றிய கல்வெட்டுக்கள் பிரமதேசம், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு போன்ற ஊர்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தென்பாண்டி நாட்டினை சேர மன்னனிடம் தோற்ற சடையவர்மன் சீவல்லப பாண்டியன் விஜயநகரப் பேரரசனான அச்சுததேவராயரிடம் முறையிட்டான் அவனும் பாண்டிய நாட்டினை மீட்டுக் கொடுத்தான். உதயமார்த்தாண்டவர்மன் விஜயநகரப் பேரரசிடம் கப்பம் கட்டாதிருந்த காரணத்தினாலும் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கேட்டுக் கொண்டதற்கிணையவும் அச்சுததேவராயர் இவனுடன் போர் செய்து வெற்றி கொண்டார். தென்பாண்டிய நாட்டினை மீட்டுக்கொடுத்த காரணத்தினால் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் தனது மகளை அச்சுததேவராயனுக்கு மணம் முடித்து வைத்தான் என்பது வரலாறு.
(ஊ) பராக்கிரம குலசேகரன்
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543 முதல் 1552 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் முதல் மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக்குத் துணையாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
(எ) நெல்வேலி மாறன்
நெல்வேலி மாறன் கி.பி. 1552 முதல் 1564 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் இரண்டாம் மகனான இவன் வீரபாண்டியன், குலசேகர பாண்டியன், பொன்னின் பாண்டியன், தர்மப் பெருமாள், அழகன் பெருமாள் போன்ற பெயர்களினையும் உடையவனாவான். புலவர்கள் பாடிய வீரவெண்பா மாலை கொண்ட இம்மன்னனது கல்வெட்டுக்கள் தென்காசியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
(ஏ) சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான். அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த இவனிற்கு இராமகிருஷ்ணர் என்ற வடமொழி அந்தணர் உதவிகள் பல செய்தார். கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன்.
(ஐ) வரதுங்கராம பாண்டியன்
வரதுங்கராமர் எனப் போற்றப்பட்ட பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன், வீரபாண்டியன் போன்ற சிறப்புப் பெயர்களையும் பெற்றிருந்தான். சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் 'வில்லவனை வென்றான், வல்லம் எறிந்தான்" எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான். பிரமோத்தர காண்டம், கருவை கலித்துறை அந்தாதி, கருவை பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி, கொக்கோகம் ஆகிய நூல்களினைப் பாடிய பெருமையினை உடையவனான இவன் சிவனிடம் பக்தி உடையவனாகத் திகழ்ந்தான்.
(ஒ) வரகுணராம பாண்டியன்
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 முதல் 1618 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். வரகுண குலசேகரப் பாண்டியன் என்ற சிறப்புப்பெயரினையும் வேத விதிப்படி வேள்விகளைச் செய்த காரணத்தினால் குலசேகர சோமாசிரியார் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான். 1748 ஆம் ஆண்டளவில் ஆட்சி செய்த பாண்டிய மன்னனொருவனும் தனது பெயரை வரகுணராம பாண்டிய குலசேகர தேவ தீட்சிதர் என தன்னை வரகுணராம பாண்டியன் பெயரினையும் தனது சிறப்புப்பெயரினையும் இணைத்து வைத்துக்கொண்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையில் இருந்தனர். மேலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர்.
(ஔ) கொல்லங்கொண்டான் (பாண்டிய அரசன்)
கொல்லங்கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் 'கொல்லங்கொண்ட பாண்டியன்' என அழைக்கப்பட்டான் எனத் திருநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இம்மன்னன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு போன்றனவற்றினையும் வென்றான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழ நாடு, நடு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் இவனைப்பற்றிய கல்வெட்டுக்களைக் காணலாம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனைப் போல இம்மன்னனும் "எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீகுலசேகர பாண்டியன்" என சிறப்பிக்கப்பட்டான். தனது ஆட்சியில் நாடெங்கு அமைதி நிலவ வேண்டும் என்ற காரணம் கருதி தனது தம்பிமார்களை அரசப் பிரதிநிதிகளாக்கினான். போரில் வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து கைப்பற்றிய பொருள்களைக் கொண்டு நெல்லைக் கோயில் திருச்சுற்று மாளிகையினை கட்டுவித்தான். நெல்லையப்பரிடம் பேரன்பு கொண்ட கொல்லங்கொண்டான் ஆட்சிக் காலத்தில் நான்கு அரசப் பிரதிநிதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக தென்காசிப் பாண்டியர்களுடன் பாண்டிய வம்சம் முடிந்தது எனவும் இன்னும் சில வரலாற்று ஆசிரியர்கள் பாண்டியர்கள் சிற்றரசர்களாக தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டார்கள் எனவும் இரு தரப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால், ஒன்று மட்டும் உறுதி தென்காசிப் பாண்டியர்களுக்குப் பிறகு பாண்டிய வம்சம் மீண்டும் தளைத்து ஓங்கவில்லை என்பதே அது. அதற்குக் காரணம் பாண்டிய நாட்டில் பிற நாட்டவர்கள் ஆட்சி செய்தது தான்.
